சென்னை: காஞ்சிபுரம், இருங்காட்டு கோட்டையில் உள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கில், தங்களது நிறுவனம் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம். தங்களது நிறுவனத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 14 ஆயிரத்து 600 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். தங்களது ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்குகிறோம். இந்த நிலையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் தங்களது நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டம் நடத்தினர். அதில் 64 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
ஸ்ரீபெரும்பத்தூர், நடுவர் நீதிமன்த்தில் இந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக, வேலை நிறுத்தம், போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம், கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரபட்டுள்ளனர். அதில், நிறுவனத்திற்கு உள்ளேயோ அல்லது நிறுவனத்தை சுற்றி 500 மீட்டர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் யாரும் போராட்டம் நடத்தக் கூடாது என்ற தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. ஆனால், தடை உத்தரவை மீறி ஊழியர்கள் போரட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இது தொடர்பாக புகார் அளித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள், தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்வதற்கோ, போராட்டங்கள் நடத்துவதற்கோ விதிக்கப்பட்ட தடையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும், நிறுவத்தின் சுமூகமான நடவடிக்கைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, வேலை நிறுத்தம் செய்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாகவும் மேலும் வெளியிலிருந்து வருபவர்களை தடுக்கிறார்கள். இந்த சங்கம் ஒரு சிறுபான்மை சங்கம் என்று குறிப்பிட்டார். தொழிற் சங்கதரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜரானார். இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி பி.வேல்முருகன் பிரதமரும், முதல்வரும் தொழில் தொடங்க வாருங்கள் என்று அழைக்கும் போது, நீங்கள் இவ்வாறு போராட்டம் நடத்தினால் யார் முதலீடு செய்ய வருவார்கள்?. நாடு எப்படி முன்னேறும்?. என்று கேள்வி எழுப்பி வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.