பாங்காங்: தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப்பிரச்னை நீடித்து வருகின்றது. இந்நிலையில் பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். இதில் தாய்லாந்து ராணுவ தளபதியை விமர்சிக்கும் வகையில் பிரதமர் ஷினவத்ரா பேசியுள்ளார்.
இந்த உரையாடல்கள் கசிந்து அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் பிரதமர் ஷினவத்ராவுக்கு எதிராக அதிருப்தி எழுந்துள்ளது. மே 28ம் தேதி கம்போடியாவுடனான எல்லைப்பிரச்னையை கையாண்ட விதம், தற்போதைய தொலைபேசி உரையாடல் எதிரொலியாக பிரதமருக்கு எதிர்ப்பலை எழுந்துள்ளது.
இதன் காரணமாக பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. இதனை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தலைநகர் பாங்காங்கில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.