Saturday, September 30, 2023
Home » அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடையும்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேச்சு

அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடையும்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேச்சு

by Neethimaan
Published: Last Updated on

* மணிப்பூர் மக்களுக்காக தேசம் துணை நிற்கிறது

புதுடெல்லி: நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடையும் என்று கூறினார். நாட்டின் 77வது சுதந்திர தின விழா அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று தேசியக் கொடி ஏற்றி வைத்தார். பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது: நாட்டின் சுதந்திர போராட்டத்திற்காக தங்களை அர்ப்பணித்த, உயிர் தியாகம் செய்த, பங்கேற்ற அனைவருக்கும் மரியாதை செலுத்தி தலைவணங்குகிறேன். இந்தியா, அடிமை மனப்பான்மையிலிருந்து வெளியேறி, இன்று புதிய நம்பிக்கையுடனும், உறுதியுடனும் முன்னேறி வருகிறது.

வரலாற்றை நாம் திரும்பி பார்க்கும் போது, அது சில அழியாத தடங்களை விட்டுச் செல்லும். அவற்றின் தாக்கம் பல நூற்றாண்டுகளாக இருக்கும். சில நேரங்களில் அவை சிறிய நிகழ்வாக தோன்றலாம். ஆனால் பல பிரச்னைக்கு அது ஆணிவேராக இருக்கக் கூடும். 2000 ஆண்டுக்கு முன்பு இந்தியா தாக்குதலுக்கு உண்டானது. ஒரு சிறிய பகுதியின் ராஜா தோற்கடிக்கப்பட்டார். ஆனால் அது நம்மை ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனத்தில் சிக்க வைக்கும் என்று அப்போது யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அதன்பின்னர், சுதந்திரத்திற்காக ஒவ்வொரு இந்தியனும் பங்களித்தனர். தேசத்திற்காக உழைக்க இன்றும் அதே போன்ற வாய்ப்பு வந்துள்ளது. சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் நாம் வாழ்வது பாக்கியம். இந்த அமிர்த காலத்தில் நாம் எடுக்கும் முடிவுகள், நமது செயல்கள், தியாகங்கள் ஆகியவை அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு நம் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய விதியை எழுதப் போகின்றன.

எனவே, அடுத்த ஆண்டு 75வது குடியரசு தினத்தை இந்தியா கொண்டாடும் நிலையில், நாட்டின் வெற்றிக்கு பங்களிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு இருக்க முடியாது. இந்தியாவின் மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை நமது அனைத்து கனவுகளையும் நிறைவேற்றும் திறனை கொண்டுள்ளது. மற்ற நாடுகள் முதுமை அடைந்து வரும் நிலையில், இந்தியா இளமையாக உள்ளது. உலகிலேயே அதிக இளைஞர்கள் நம்மிடம் தான் உள்ளனர். இது தன்னம்பிக்கை நிறைந்த புதிய இந்தியா. எனவே, 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. பொருளாதாரத்தை வலுப்படுத்தி, மக்களுக்கு அதிகாரம் அளித்து, இந்தியாவை வளர்ந்த

நாடாக மாற்றுவதே எனது அரசின் குறிக்கோள்.
தேசமே முதலில் என்ற கொள்கையை கொண்டுள்ளதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடையும். இது மோடியின் உத்தரவாதம். இப்போது, நகரங்கள் மட்டுமின்றி சிறிய கிராமங்கள் மற்றும் 2ம் தர நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகின்றனர். நம் தேசத்தில் வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை, இதைத்தான் நாட்டின் இளைஞர்களுக்கு நான் கூறிக் கொள்ள விரும்புவது. 2014ல் நிலையான, வலுவான மற்றும் முழு பெரும்பான்மை அரசை மக்கள் தேர்ந்தெடுத்ததன் மூலம், நிச்சயமற்ற மற்றும் உறுதியற்ற அரசியல் சகாப்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

அதன்பிறகு, சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவற்றின் மூலம் எங்களின் வாக்குறுதி நம்பிக்கையாக மாறியதால், 2019ல் மீண்டும் வாக்களித்தனர். இந்த 9 ஆண்டுகால ஆட்சியில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. உலகின் நண்பனாக இந்தியா அடையாளம் காணப்படுகிறது. இந்தியா எதைச் சாதித்தாலும், அது உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. எனவே, அடுத்த ஆகஸ்ட் 15ம் தேதியும் நாட்டின் சாதனைகள், வெற்றிகள் மற்றும் அரசின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து அதிக தன்னம்பிக்கையுடன் செங்கோட்டையில் இருந்து உங்களிடம் உரையாற்றுவேன்.

ஊழல், வாரிசு அரசியல் மற்றும் திருப்திபடுத்துதல் ஆகிய மூன்றும் நாட்டிற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். இந்த தீமைகளுக்கு எதிராக நாம் போராட வேண்டும். வளர்ந்த தேசத்தின் கனவை நனவாக்க ஊழலை எந்த வடிவத்திலும் சகித்துக் கொள்ள முடியாது. கரையான்களைப் போலவே, ஊழல் நாட்டின் அமைப்புகளையும் அதன் திறன்களையும் முற்றிலும் வெறுமையாக்கி விடும். ஒவ்வொரு துறையிலும் ஊழலுக்கு எதிராகப் போராடுவது முக்கியம். இந்தப் போராட்டத்தை தொடர்வதே எனது வாழ்நாள் அர்ப்பணிப்பு. நன்னடத்தை, வெளிப்படைத்தன்மை, பாரபட்சமற்ற தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவது நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

‘குடும்ப உறுப்பினர்களே’
கடந்த 9 ஆண்டில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில், ‘எனது அன்பான சகோதர, சகோதரிகளே’ என்றோ, ‘அன்பான குடிமக்களே’ என்றோ பேசி உள்ளார். ஆனால் இம்முறை ‘என் அன்பான குடும்ப உறுப்பினர்களே’ என குறிப்பிட்டார். அவரது 90 நிமிட உரையில் சுமார் 50 முறை அந்த வார்த்தையை அவர் பயன்படுத்தினார். அவர் பேசுகையில், ‘‘என் குடும்ப உறுப்பினர்களே, நான் உங்களிடமிருந்து வந்திருக்கிறேன், நான் உங்களுக்காக வாழ்கிறேன், நான் உங்களுக்காகவே கனவு காண்கிறேன், உங்களுக்காக கடினமாக உழைக்கிறேன். நீங்கள் எனக்கு பொறுப்பைக் கொடுத்து விட்டீர்கள் என்பதற்காக மட்டும் அதை செய்யவில்லை. நீங்கள் என் குடும்பம், உங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக, உங்கள் வலியை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது, உங்கள் கனவுகளை நசுக்க அனுமதிக்க முடியாது’’ என பேசினார்.

கவனத்தை ஈர்த்த தலைப்பாகை
கடந்த 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு சுதந்திர தின விழாவிலும் பிரதமர் மோடி வண்ணமயமான தலைப்பாகை அணிவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதே போல இம்முறையும் அவரது தலைப்பாகை பலரின் கவனத்தை ஈர்த்தது. இம்முறை அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பந்தனி தலைப்பாகை அணிந்திருந்தார்.  அதில், மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்து இருந்தன. அரை வெள்ளை நிற குர்தா, பேண்ட் மற்றும் கருப்பு நிற ஓவர் கோட் அணிந்திருந்தார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி மூவர்ண நிற தலைப்பாகை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் சுதந்திர தின விழா
காஷ்மீரில் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாததால் எந்தவித தடைகளும் விதிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு சுதந்திர தின விழாக்களில் கலந்து கொண்டனர். 20 ஆண்டுகளுக்கு பின் பக்சி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

பல அடுக்கு பாதுகாப்பு
செங்கோட்டையில் சுதந்திர தின விழாவையொட்டி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. செங்கோட்டையை சுற்றி 10,000 பாதுகாப்பு படையினர், போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். முக அடையாளம் மற்றும் வீடியோ கண்காணிப்பு வசதிகள் கொண்ட 1,000 கேமராக்கள் கோட்டையின் உள்ளேயும், வெளியிலும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.  விழா முடியும் வரை செங்கோட்டையை சுற்றி வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. ராஜ்கட், ஐடிஓ மற்றும் செங்கோட்டையின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. டிரோன் மட்டுமின்றி பட்டம் பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

90 நிமிடங்கள் உரை
பிரதமர் மோடி நேற்று 90 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றினார். சரியாக காலை 7:34 மணிக்கு உரையை தொடங்கி 9:03 மணிக்கு நிறைவு செய்தார். கடந்த 10 ஆண்டுகளில் அவர் அதிகபட்சமாக 2016ம் ஆண்டில் 96 நிமிடங்கள் உரையாற்றினார்.

நகரங்களில் சொந்த வீடு திட்டம் விரைவில் அமல்
சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, ‘‘நகரங்களில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கு சொந்த வீடு வாங்குவது வாழ்க்கை கனவாக இருந்து வருகிறது. அவர்களுக்கான சொந்த வீடு திட்டம் மீண்டும் விரைவில் அமல்படுத்தப்படும்’’ என்றார். நகர்ப்புறங்களில் வீடு இல்லாத ஏழைகளுக்காக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் 2022ம் ஆண்டுடன் முடிவடைந்த நிலையில் 2024 டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 4 விதமாக செயல்படுத்தப்படுகிறது. இதில், வீட்டு கடனில் ரூ.2.5 லட்சம் கடன் மானியம் வழங்கும் சிஎல்எஸ்எஸ் என்ற பிரிவின் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் பலன் அடைந்தனர். இந்த ஒரு பிரிவு மட்டும் 2022 மார்ச் மாதத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படவில்லை. தற்போது மீண்டும் இப்பிரிவு அமல்படுத்தப்படும் என பிரதமர் கூறியிருப்பது முதல் முறையாக சொந்த வீடு வாங்கும் நடுத்தர மக்களுக்கு பயன் தரும்.

இசைக்கலைஞர் ரிக்கிக்கு பாராட்டு
மூன்று முறை கிராமி விருது வென்ற இந்திய வம்சாவளி இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் வித்தியாசமான முறையில் தேசிய கீத இசை வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டார். லண்டனில் உள்ள ஐகானிக் அபே ரோடு ஸ்டூடியோவில், இந்த இசை வீடியோ பிரபல ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவைச் சேர்ந்த 100 இங்கிலாந்து இசைக்கலைஞர்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியரான ரிக்கி கேஜ், தலைமை வகிக்க, அவரின் கீழ் இங்கிலாந்து இசைக்கலைஞர்கள் இந்திய தேசிய கீதத்தை இசைத்து இறுதியில் ‘ஜெய ஹே’ பாடி நிறைவு செய்தது பலரையும் கவர்ந்தது. இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த பிரதமர் மோடி, ‘‘அற்புதம். இது நிச்சயம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும்’’ என பாராட்டி உள்ளார்.

* பிரதமர் மோடி தனது உரையில், பாரம்பரிய கைவினைக் கலைஞர்களுக்காக ‘விஸ்வகர்மா யோஜனா’ என்னும் திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். குறிப்பாக ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பயனடையும் இந்த திட்டம் சுமார் ரூ13,000 முதல் ரூ15,000 கோடி ஒதுக்கீட்டில் தொடங்கப்படும் என்றும், இத்திட்டத்தின் மூலம் நெசவாளர்கள், பொற்கொல்லர்கள், கொல்லர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் பயனடைவார்கள் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

* கிராமங்களில் 2 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவது எனது கனவு என்றும் மோடி கூறினார்.

* நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பெண்கள் தலைமையிலான வளர்ச்சி அவசியம் என்றார்.

* மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க, மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

* மணிப்பூர் மக்களுக்கு இந்தியா துணை நிற்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, மணிப்பூர் பிரச்னைகளைத் தீர்க்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன, அதை தொடர்ந்து செய்வோம் என உறுதி அளித்துள்ளார்.

* சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா மற்றும் பூடான் பிரதமர் லோடே ஷெரின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

சுதந்திர தின விழா துளிகள்
* பிரதமர் மோடி காலை 7:18 மணிக்கு செங்கோட்டைக்கு வந்தார்.
* அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட் மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர் கிரிதர் அரமனே ஆகியோர் வரவேற்றனர்.
* முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
* செயலாளர் கிரிதர், கமாண்டிங் ஜெனரல் ஆபீசரான லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத்தை பிரதமர் மோடிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

* காலை 7.30 மணி அளவில் பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். ராணுவ பெண் அதிகாரிகளான மேஜர் நிகிதா நாயர் மற்றும் மேஜர் ஜாஸ்மின் கவுர் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைக்க பிரதமர் மோடிக்கு உதவினர்.
* அப்போது பேண்ட் வாத்தியங்களுடன் தேசிய கீதம் ஒலிக்க, 21 குண்டுகளுடன் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. இதில் முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 105 எம்எம் இலகுரக பீல்ட் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன.
* விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் தேசியக் கொடிக்கு வானில் இருந்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

* பிரதமர் மோடி தொடர்ந்து 10வது முறையாக சுதந்திர தின உரையாற்றினார். துப்பாக்கி குண்டுகள் தகர்க்காத கூண்டுகள் இல்லாமல் திறந்தவெளி தளத்தில் நின்றபடி அவர் உரையாற்றினார்.
* துடிப்புமிக்க கிராமங்களை சேர்ந்த கிராம தலைவர்கள், விவசாயிகள், மீனவர்கள், செவிலியர்கள் மற்றும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டும் பணியில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் என 1,800 பேர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
* நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்து 75 தம்பதிகள் அவரவர் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர்.

* கல்வியில் சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய 50 ஆசிரியர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
* அமெரிக்க எம்பிக்களான இந்திய வம்சாவளி ரோ கண்ணா, மைக்கேல் வால்ட்ஸ் உள்ளிட்டோர் வெளிநாட்டு விருந்தினர்கள் பங்கேற்றனர்.
* ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், தர்மேந்திர பிரதான், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, பியூஸ் கோயல், அனுராக் தாகூர், ஹர்தீப் சிங் பூரி, ஸ்மிருதி இரானி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

* டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் ஆளுநர் வினய் குமார் சக்சேனா ஆகியோரும் வந்திருந்தனர்.
* செங்கோட்டையில் செய்யப்பட்டிருந்த மலர் அலங்காரத்தில் ஜி20 லோகோ இடம் பெற்றிருந்தது.
* உரையாற்றி முடித்ததும் பிரதமர் மோடி, அரங்கில் இருந்த பள்ளி குழந்தைகள், என்சிசி மாணவ, மாணவிகளை சந்தித்தார். அப்போது அவர்கள் ‘வந்தே மாதரம்’, ‘பாரத் மாதா கி ஜே’ என முழங்கினர்.

உலகம் முழுவதும் கொண்டாட்டம்

உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் இந்தியர்கள் நேற்று தங்களது நாட்டின் 77வது சுதந்திர தினத்தை கொண்டாடி தங்களது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினார்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா உள்பட்ட பல்வேறு வெளிநாடுகளிலும் வாழும் இந்தியர்கள் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். சுதந்திர தினத்தையொட்டி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ்,

அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் உள்ளிட்டோர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ மற்றும் பிரதமர் நரேந்திரமோடிக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மொரிசீயஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜூக்நாத், நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால், பூடான் பிரதமல் லோடே ஷெரிங், மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலிக் ஆகியோரும் பிரதமர் மோடிக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர்களுக்கு பிரதமர் மோடி சமூக வலைதளம் மூலமாக நன்றி தெரிவித்து இருந்தார்.

* சுதந்திர தினத்தையொட்டி கூகுள் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஜவுளி வகைகளின் ஓவியத்தை காட்சிப்படுத்தி டூடுல் வெளியிட்டு இருந்தது.
* பாஜ மூத்த தலைவரான எல்கே அத்வானி(95)டெல்லியில் இருக்கும் தனது இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?