சியாஹா: நான் 20 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களுக்கு வருகை தருகிறேன். ஆனால், இவற்றின் தலைநகரங்களை வந்தடைவது எளிதல்ல என்று ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். மிசோரமின் சியாஹா நகரில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் திரண்டிருந்த மக்களிடையே பேசும்போது, காங்கிரஸ் கட்சியை சாடியும் பேசினார்.அவர் பேசும்போது, காங்கிரசின் ஆட்சி காலத்தில், டெல்லி, மிசோரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் தூரத்தில் இருந்தன என்பது மட்டுமின்றி , அவர்களின் அரசின் மனங்களில் இருந்தும் தூரத்தில் இருந்தன என்று பேசியுள்ளார்.
நான் கடந்த 20 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களுக்கு வருகை தருகிறேன். இவற்றின் தலைநகரங்களை வந்தடைவது எளிதல்ல. நேரடியான வழிகள் கிடையாது. ஆனால் இன்று டெல்லியில் இருந்து ஒவ்வொரு வடகிழக்கு மாநிலத்திற்கும் நேரடி இணைப்பு வசதி உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு மாநிலமும், ஒரு விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது என்று அவர் பேசியுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஆட்சிக்கு வந்த பின்னர் வடகிழக்கு மாநிலங்கள் விரைவாக வளர்ச்சி அடைந்துள்ளன என ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.