சென்னை : தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாஜக மூத்த தலைவர் அமித்ஷா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் இருக்கையில் தான் அமர நேரிடும் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “77 வயதாகும் நவீன் பட்நாயக், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வுபெற வேண்டும், பாஜக ஆட்சி அமைத்தால் ஒடியா மொழிப் பேசும் இளைஞரை முதல்வராக்குவோம்.” எனத் தெரிவித்தார்.
அமித்ஷாவின் பேச்சு குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள சிதம்பரம், வயது மூப்பு காரணமாக 77 வயதாகும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை ஓய்வெடுக்குமாறு கூறும் அமித்ஷா, ஒருவேளை பாஜக ஆட்சி அமைந்தால் 74 வயதை நெருங்கும் பிரதமர் மோடி ஓய்வெடுக்க வேண்டும் என்று மறைமுகமாக அறிவுரை சொல்கிறாரா எனக் கேள்வி எழுப்பினார். நாட்டில் பாஜக ஆட்சி அமையவில்லை என்றால் மகிழ்ச்சி அடைவது அமித்ஷாவாக இருக்கும் என பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், ஏனென்றால் மோடியை விடுத்து அமித்ஷா தான் எதிர்க்கட்சி தலைவர் இருக்கையில் அமர்வார் என்று தெரிவதாக கூறியுள்ளார்.