டெல்லி : டெல்லி பல்கலைகழகத்தில் தகுதியானவர்கள் இல்லை என்று கூறி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர்களுக்கான இட ஒதுக்கீட்டு பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கல்வி மற்றும் தலைமைத்துவத்தில் இருந்து விலக்கி வைப்பதற்காக தகுதிவாய்ந்த எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி போட்டியாளர்கள் வேண்டுமென்றே தகுதி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கல்வி, சமத்துவத்திற்கான மிகப்பெரிய ஆயுதம் என பாபா சாஹேப் கூறியுள்ளதாகவும் ஆனால் மோடி அரசு அந்த ஆயுதத்தை மழுங்கடிப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் 60% இட ஒதுக்கீட்டு பேராசிரியர் பணியிடங்களும் 30% இணை பேராசிரியர் பணியிடங்களும் தகுதியான நபர்கள் இல்லை எனக்கூறி காலியாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐஐடிக்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் உட்பட எல்லா இடங்களிலும் இதே சதி நடப்பதாக அவர் கூறியுள்ளார். தகுதியான நபர்கள் இல்லை என்பது அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்றும் சமூக நீதிக்கு துரோகம் இழைப்பது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒவ்வொரு இட ஒதுக்கீடு எதிர்ப்பு நடவடிக்கைக்கும் அரசியலமைப்பின் சக்தியுடன் பதில் அளிப்போம் என குறிப்பிட்டுள்ள ராகுல், இது கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான போராட்டம் மட்டும் அல்ல, உரிமைகள், மரியாதைக்கான போராட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.