Saturday, June 22, 2024
Home » பிரதமர் மோடியின் தியானம் செய்வது அரசியல் நாடகம்.. தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை!!

பிரதமர் மோடியின் தியானம் செய்வது அரசியல் நாடகம்.. தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை!!

by Porselvi
Published: Last Updated on

சென்னை : பிரதமர் மோடி, விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது சமூகவலைத்தள பக்கத்தில், 2024 மக்களவைத் தேர்தல் இறுதி பரப்புரை முடிந்து, மே 30ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை புரிந்து, அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் மூன்று நாட்கள் தியானம் செய்வதென நரேந்திர மோடி திட்டமிட்டிருக்கிறார். இறுதிகட்ட தேர்தல் நடைபெற இருக்கிற 57 மக்களவைத் தொகுதிகளில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய பிரதமர் மோடி தேர்வு செய்திருப்பதைவிட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது. பதவிக்காக நரேந்திர மோடி எவ்வளவு தரம் தாழ்ந்த நிலைக்கும் செல்வார் என்பதற்கு இந்தத் ‘தியான நாடகம்” ஒரு உதாரணமாகும்.

சுவாமி விவேகானந்தர் தம் வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கத்தைக் கடைப்பிடித்து இந்துமதத்தை உலகம் முழுவதும் பரப்பியவர். அனைத்து மதத்தினராலும் அன்போடு நேசிக்கப்பட்டவர். அவர் ஒரு சாந்த சொரூபி. அதேநேரத்தில், தமது நாவன்மையால் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர். அவரது ஆன்மீகப் பயணத்தில் 1893ஆம் ஆண்டில் செப்டம்பர்11 அன்று அமெரிக்காவில், சிகாகோ நகரில் நடைபெற்ற சமய மாநாட்டில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். அதில், விவேகானந்தர் உரையாற்றும் போது, ‘உலகில் அனைத்து மதங்களாலும் துன்புறுத்தப்பட்டவர்களுக்கும், அகதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்த ஒரு தேசத்தைச் சேர்ந்தவன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டதை எவரும் மறந்திட இயலாது.

தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றிய தனிவிதமான, பிரத்யேகவாதப் பார்வையைக் கொண்டவர்களை ஏளனம் செய்த விவேகானந்தர், “தான் சார்ந்திருக்கும் மதம் ஒன்று மட்டும்தான் நிலைத்திருக்க வேண்டும். மற்ற மதங்கள் அழிந்துவிட வேண்டும் என்று எவராவது கனவு கண்டால், அவருக்காக நான் என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து பரிதாபப்படுகிறேன்” என்று கூறினார்.

சுவாமி விவேகானந்தர் தமது உரையை நிறைவு செய்கிற போது, ‘ஒருவருக்கு நல்லிணக்கமும், அமைதியும் மட்டுமே தேவைப்படுகிறது. வேற்றுமை அல்ல என்றும், இதை ஒவ்வொரு மதத்தின் பதாகையிலும் எழுதப்பட வேண்டும்” என்று மோடிக்கு உரைக்கிற மாதிரி 131 ஆண்டுகளுக்கு முன்பு பேசியவர் சுவாமி விவேகானந்தர்.

குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திரமோடி இருந்தபோது ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பகிரங்கமாகப் படுகொலை செய்யப்பட்டபோது, ரோம் நகர் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப்போல கண்டும் காணாமல் இருந்தவர் தான் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி. இளமை காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து, மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் கோல்வால்கரின் சிந்தனைத் தொகுப்புகளைப் படித்து வளர்ந்த நரேந்திர மோடியால் சுவாமி விவேகானந்தரின் உரைகளைப் படித்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே படித்திருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிற மனநிலை அவருக்கு இருந்திருக்காது.

அதிகாரவெறி, பகைமை, வெறுப்பு, பொய்மை, மனிதகுலத்தைப் பிளவுபடுத்தும் வஞ்சக புத்தி கொண்ட ஒருவருக்கு மனம் ஒன்றிய தியானம் என்றுமே கிட்டாது. ஆன்மீக மாண்புகளை மீறி மதவெறியால் ஆட்கொள்ளப்பட்டு, ஆரோக்கியமற்ற விரக்தியான மனநிலைக்குச் சென்றுவிட்ட நரேந்திர மோடி, ஆன்மீக ஞானக்கடல் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வது என்பது ஏமாற்று நாடகம்.

சுவாமி விவேகானந்தரின் போதனைகளை ஏற்று அவரைப் போற்றுபவர்கள் எவரும் நரேந்திர மோடியின் தியான முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சுவாமி விவேகானந்தரை இழிவுபடுத்துகிற முயற்சியில் ஈடுபட்டு, அதன்மூலம் இந்து மதத்திற்கே களங்கம் கற்பிப்பவராக நரேந்திர மோடியின் தியான நாடகம் அமைந்திருக்கிறது. இது அரசியல் நோக்கம் கொண்டதே தவிர, ஆன்மீக நோக்கம் கொண்டதல்ல.

மே30 அன்று, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தியான நாடகம், தமிழ்நாட்டிற்கு மட்டும் அவமானமல்ல. இந்தியாவிற்கே அவமானமாகும்.நரேந்திர மோடி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தன்னந்தனியாக தியானம் செய்கிற மூன்று நாட்களும் அங்கு சுற்றுலா பயணிகள் எவரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடை மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிற செயலாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கு பிரதமர் மோடிக்குக் கடுகளவும் சட்டப்படி உரிமை இல்லை என்பதை இங்கே உறுதியாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஏழாம் கட்ட இறுதித் தேர்தல் பரப்புரை மே 30ம் தேதி மாலையோடு முடிவடைகிற நிலையில், விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து மௌனமாகத் தியானம் செய்வது, பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக வாக்களிக்கத் தூண்டுகிற பரப்புரையாகவே கருதவேண்டும். இதன்மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஒரு பிரதமரே அப்பட்டமாக மீறுகிற செயலாகும். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தியானம் மேற்கொள்கிற நடவடிக்கைக்குத் தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும், அதற்கு அனுமதி அளிக்கக் கூடாதென்று தமிழ்நாடு தலைமைக் காவல்துறை அதிகாரியிடமும் நேரில் சந்தித்து வலியுறுத்த தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இன்று கோரிக்கை மனு அளிக்க இருக்கிறோம். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிற வகையில், பிரதமர் மோடி, விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று கோருகிறோம்,”என்று குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

fifteen + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi