புதுடெல்லி : எதிர்க்கட்சிகள் வளர்ச்சி பற்றி பேசுவார்கள். ஆனால் துரோகத்தை தான் வெளிப்படுத்துவார்கள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். அந்தமான் நிகோபாரின் தலைநகரான போர்பிளேரில் வீர சவார்க்கர் சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. கடலின் அழகை பிரதிபலிக்கும் வகையில் சிப்பி வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முனையம், ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது. ஒரே நேரத்தில் இங்கு 10 விமானங்களை நிறுத்த முடியும். ரூ.710 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த புதிய முனையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக புதிய முனையத்தை திறந்து வைத்தார்.இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் பேசியது பின்வருமாறு,”மக்களுக்கு புதிய வசதி, வாய்ப்புகளை பாஜக ஆட்சியில் ஏற்படுத்தி வருகிறோம். பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர்.இந்தியாவின் சில கட்சிகளின் சுயநல அரசியலால், பெரு நகரங்களின் வளர்ச்சி தடைபட்டது.எதிர்கட்சிகளின் கூட்டம் ஊழலுக்கு கேரண்டி தரும் கூட்டம்.எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஊழல்வாதிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்துகின்றனர்.குடும்பத்தால் , குடும்பத்திற்காக அரசியல் செய்வதே எதிர்க்கட்சிகளின் கொள்கை.ஊழல் வழக்குகள் சந்தித்தாலும் எதிர்க்கட்சிகள் ஒன்றன் மீது ஒன்று நற்சான்று வழங்குகின்றன.மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட வன்முறைகள் குறித்து எதிர்கட்சிகள் பேச மறுக்கின்றனர்.பழங்குடியினர், தீவுப்பகுதிகள் வளர்ச்சியை இழக்க எதிர்க்கட்சிகளே காரணம்,”இவ்வாறு மோடி பேசியுள்ளார்.