சென்னை: அரசியலமைப்பு சட்டத்தின் மீது தான் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை பிரதமர் காற்றில் பறக்க விட்டுள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: மத்திய பிரதேசத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, “சனாதனத்தை ஒழிக்கும் முயற்சியில் எதிர்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரின் பேச்சு சனாதன சம்பிரதாய நடைமுறைகள் மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்கு மதவெறியூட்டும், அவரது மலிவான நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின் மீது தான் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை பிரதமர் காற்றில் பறக்க விட்டுள்ளார். சமய நம்பிக்கை என்பது மனிதர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. ஒருவர் எந்த ஒரு சமயத்தையும் தேர்வு செய்து, அதனை வழிபட்டு வருவதற்கு நமது அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாப்பளிக்கிறது. ஆனால் அரசு எந்த மதத்தையும் சாராத, மதச்சார்பற்ற பண்பினை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வர வேண்டும் என வழிகாட்டுகிறது.
பிரதமர் பொறுப்பு ஏற்கும் முன்பு சட்டப்படி ஏற்றுக்கொண்ட உறுதி மொழிக்கும், ரகசிய காப்புப் பிரமாணத்துக்கும் மாறாக பிரதமர் அரசு நிகழ்ச்சியை கட்சி அரசியல் பரப்புரை மேடையாக்கி, எதிர்கட்சிகள் மீது பழி சுமத்துவது அவரது பொறுப்புக்கு உகந்த செயலாகாது. சமூக வாழ்வில் நல்லிணக்கம் பேணுவதில் அக்கறை காட்ட வேண்டிய பிரதமர் மோடி, அதற்கு எதிராக பேசி வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.