போபால்: இந்தியாவின் பிரதமராக 3வது முறை தேர்தடுக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் முன்னணி நாடுகளில் ஒன்றாக உயரும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் தாமு பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டனை பின்னுக்கு தள்ளி நாட்டின் பொருளாதாரத்தை 5வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.
2024ல் 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பொருளாதாரத்தை முதல் மூன்று இடங்களுக்குள் கொண்டு வருவோம் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார். இந்தியாவின் சாதனைகளை ஒட்டுமொத்த உலகமே புகழ்ந்து கொண்டு இருப்பதாகவும் விளையாட்டு துறையில் இளைஞர்கள் நாள்தோறும் சாதனைகளை படைத்து கொண்டு இருப்பதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.