சென்னை: தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் ஜூலை மாதம் 2346 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள், என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் சென்னையில் நேற்று காலை நடந்தது. இதில் 25 மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்ககல்வி) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) பங்கேற்றனர்.
கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகள், திட்டங்கள், மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் முறையாக அனைத்து மாணவ, மாணவியருக்கு சென்று சேர்கிறதா என்பதை முறையாக கண்காணிக்கவும், நல்ல சமுதாயத்தை உருவாக்குவதன் பொறுப்பும் பள்ளி கல்வி துறைக்கு உள்ளது. எனவே இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்றி ஆய்வு கூட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும்.
இதுவரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 3 லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். அதற்காக உழைத்த அலுவலர்களை பாராட்டியுள்ளோம். தொடக்க கல்வி இயக்ககத்தில் வருகிற ஜூலை மாத இறுதிக்குள் 2346 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அதற்காக நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குனர் சங்கர், மாதிரிப்பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ், அரசு தேர்வுகள் இயக்குனர் லதா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் உமா, தனியார் பள்ளிகள் இயக்குனர் குப்புசாமி உள்ளிட்ட இணை இயக்குனர்கள், கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டம் இன்றும் தொடரும். அதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, கரூர், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.