ஸ்ரீவில்லிபுத்தூர்: அர்ச்சகர்கள் ஆபாச நடனமாடிய வழக்கில் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோயிலை சேர்ந்த அர்ச்சகர்கள் ஆபாச நடனமாடும் வீடியோ கடந்த வாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார், அர்ச்சகர் கோமதிநாயகம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவானவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆபாச நடன வீடியோவை வெளியிட்ட சபரிநாதன் என்பவர் முன்ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெயக்குமார், ‘‘இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை புனிதமான கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது’’ என்று கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல் அர்ச்சகர் கோமதிநாயகம் உள்பட 2 பேர் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களது மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.