மதுரை: ஓ.ராஜாவின் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்படும் என பூசாரியின் பெற்றோர் கூறியுள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயில் பூசாரியாக இருந்த நாகமுத்து, கடந்த 2012ல் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா உள்ளிட்டோர் காரணமென கடிதம் எழுதி வைத்திருந்தார். இதுதொடர்பாக ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒருவர் உயிரிழந்து விட்ட நிலையில், இவ்வழக்கை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம் ஓ.ராஜா உட்பட 6 பேரையும் விடுதலை செய்தது. இதுதொடர்பாக, எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் எவிடென்ஸ் கதிர் மற்றும் தற்கொலை செய்து கொண்ட பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ், தாய் சுப்புத்தாய் ஆகியோர் மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பூசாரியின் பெற்றோர் கூறியதாவது: பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் ஓ.ராஜா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. தலித் பூசாரியாக பணியாற்றக் கூடாது என நாகமுத்து தாக்கப்பட்டு உள்ளார். போலீசில் புகார் அளித்தற்காக ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா உள்ளிட்டோரால் பூசாரி நாகமுத்து மிரட்டப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் கடந்த 2012ல் நாகமுத்து தற்கொலை செய்துகொண்டார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்ததால், நாகமுத்து தற்கொலை வழக்கில் முறையான விசாரணை நடத்தவில்லை.
இவர்களை விடுதலை செய்ததை எதிர்த்து, ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். நாகமுத்து குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, அவரது பெற்றோருக்கு ரூ.12 ஆயிரம் ஓய்வூதியம், அவரது தங்கைக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உச்சநீதிமன்றம் வரை இந்த வழக்கை எடுத்து செல்வோம். தற்கொலை கடிதத்தில் நாகமுத்து குறிப்பிட்ட காவல் அதிகாரிகளின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. விடுதலைக்கான காரணத்தை நீதிமன்றம் சொல்லவில்லை. எஸ்.சி-எஸ்.டி வழக்குகளின் விசாரணை முறையாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க அரசு கமிட்டி அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.