திண்டுக்கல்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நாகமுத்து (22). கைலாசநாதர் கோயில் பூசாரி. கோயிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக நாகமுத்துவுக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியும், அப்போதைய கோயில் அறங்காவலருமான ஓ.ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் நாகமுத்து தாக்கப்பட்டார். இதனால் மனமுடைந்த நாகமுத்து கடந்த 2012 டிச. 7ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக ஓ.ராஜாஉ்ட்பட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின்போது பாண்டி இறந்துவிட்டார். விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது ஓ.ராஜா உள்பட 6 பேர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஓ.ராஜா உள்பட 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதி முரளிதரன் தீர்ப்பு அளித்தார்.