சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பிரதீப் குமார் தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் என்பது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் மற்றும் ஆற்றல் திறன் மற்றும் பாதுகாப்புத் திட்டங்களுக்கான நிதி உதவியை மேம்படுத்துதல், விரிவாக்குதல் ஆகியவற்றில் 36 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட ஒரு நிதி நிறுவனமாகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் மற்றும் உபகரண உற்பத்தி மற்றும் பரிமாற்றம் போன்ற பிற முக்கிய நடவடிக்கைகளுக்கு விரிவான அளவிலான நிதி தயாரிப்புகள் மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்கப்படுகிறது.
இந்நிறுவனத்திற்கு 2023 நிதியாண்டில், நிகர வட்டி வருமானம் ரூ13,02,376 லட்சமாக அதிகரித்துள்ளது. நிகர லாபம் 2022 நிதியாண்டில் ரூ63,352 லட்சத்தில் இருந்து 2023 நிதியாண்டில் ₹86,462 லட்சமாக அதிகரித்தது. இந்த நிறுவனங்களில் பங்குகளை நவ.21ம் தேதிமுதல் 23ம் தேதி வரை வாங்கலாம். ஒரு பங்கிற்கு ரூ30 முதல் 32 வரை விலை நிர்ணயித்துள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 460 பங்குகளும் அதன்பின் 460 பங்கு மடங்குகளுக்கும் ஏலம் எடுக்கலாம். இந்தச் சலுகையானது 40,31,64,706 பங்குகள் வரையிலான புதிய பங்குகள் மற்றும் 671,941,177 பங்குகள் வரை மொத்தம் 268,776,471 பங்குகளின் விற்பனைக்கான சலுகை ஆகியவற்றை உள்ளடக்கியது. இவ்வாறு அவர் கூறினார்.