அண்ணாநகர்: ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் அனைத்து பூக்களின் விலையும் குறைந்தது. இந்தநிலையில், ஆயுதபூஜை முன்னிட்டு இன்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி 800க்கும் முல்லை, ஜாதி மல்லி மற்றும் ஐஸ் மல்லி 500க்கும் கனகாம்பரம் 600க்கும் சாமந்தி 180க்கும் சம்பங்கி 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பன்னீர் ரோஸ் 80க்கும் சாக்லேட் ரோஸ் 120க்கும் அரளி பூ 300க்கும் விற்பனையாகிறது.
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது,’’கடந்த 2 வாரத்துக்கு முன் அனைத்து பூக்களின் விலையும் குறைந்தது. அதேபோல் வியாபாரம் இல்லாமல் சாமந்தி, பன்னீர் ரோஸ், சாக்லேட் ரோஸ் ஆகிய பூக்கள் தேக்கம் அடைந்ததால் 10 ஆயிரம் டன் பூக்களை குப்பையில் கொட்டினோம். வரும் ஆயுதபூஜையை முன்னிட்டு இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை அனைத்து பூக்களும் மீண்டும் உயரும் வாய்ப்புள்ளது’ என்றார்.