சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் விற்காத பூக்களை வியாபாரிகள், விவசாயிகள் அவற்றை குப்பையில் கொட்டி அழித்தனர். சென்னை மற்றும் வெளிமாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
மேலும் மழை காரணமாக கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து வகையான பூக்களின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. நேற்று காலை ஒரு கிலோ மல்லி, ஐஸ் மல்லி கனகாம்பரம் ஆகியவை ரூ.300, முல்லை, ஜாதிமல்லி ரூ.200, அரளி பூ ரூ.50, சாமந்தி ரூ.10, சம்பங்கி ரூ.20, பன்னீர்ரோஸ் ரூ.10, சாக்லேட் ரோஸ் ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘மழையின் காரணமாக கடந்த 3 நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் குறைந்த விலையில் வியாபாரிகள் பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். மழையின் காரணமாக சென்னை புறநகரில் இருந்து வரும் வியாபாரிகளின் வருகை குறைந்ததால் 20 டன் பூக்கள் தேக்கம் அடைந்தது. அனைத்து பூக்களையும் குப்பை தொட்டியில் வியாபாரிகள் கொட்டி வருகின்றனர். இதனால் வியாபாரிகள், விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.’’ இவ்வாறு அவர் கூறினர்.