சென்னை: 10 ஆண்டுகால விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் பாஜக ஒன்றிய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்துள்ளது. உழைக்கும் மக்கள் உயிர் வாழ்வுக்கு அத்தியாவசிய தேவையான உணவுப் பொருட்கள் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. தக்காளி, வெங்காயம், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் உள்ளிட்ட தானியங்கள் விலைகள் அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளில் 100 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்து வருகின்றது.
இந்தக் காலகட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் பல லட்சம் கோடி ரூபாய் சலுகை பெற்று, கொழுத்து வளர்ந்துள்ளன. தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் உட்பட உழைக்கும் மக்கள் வருமான இழப்புகளுடன், விலைவாசி உயர்வை எதிர்கொள்ள முடியாமல் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறார்கள்சிறு, குறு, நடுத்தர தொழில்களை மூலப்பொருட்கள் விலை உயர்வும், அரசின் வரிக் கொள்ளையும் மரணப் படுகுழியில் தள்ளி வருகிறது.
இந்த மோசமான வாழ்க்கை சூழலில் பன்னாட்டு நிறுவனங்களின் லாப வேட்டைக்கு சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்கு இருமுறை உயர்த்தி வருகிறது. பாஜக, தேசிய ஜனநாய அணியின் ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து வரும் 07.09.2024 சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகர்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துமாறு கட்சி அமைப்புகளையும், உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறது. மக்கள் நலன் சார்ந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பகுதி மக்களும் பங்கேற்று ஆதரிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .