சென்னை: சென்னையில் மாநில அளவிலான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விதிகளைப் பற்றிய பயிற்சியினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக சமத்துவம் காண்போம் என்கிற மாநில அளவிலான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் விதிகளைப் பற்றிய பயிற்சியினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் இன்று தொடங்கி வைத்து பயிற்சிக்கான கையேட்டினை வெளியிட்டார்கள்.
இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்கள் பேசியதாவது; முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக நடைபெறும் இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியுரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1955 மற்றும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அனைத்து சமுதாய மக்களும் சமூக சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ்வதை உறுதி செய்யும் நோக்கத்துடன் “மனித நேய வார விழாக்கள் 1998 ஆம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 24 முதல் ஜனவரி 30 வரை கொண்டாடப்பட்டு வருகின்றன.
வன்கொடுமைகள் தடுப்புச்சட்டம் 1989- இல் விதிகளை 1995 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டன. ஆனால் அதற்கு முன்னரே வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்துபோன நபர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என 1989 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களால் அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் செயலாக்கம் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களிடமும் சமத்துவத்தையும் சகோரத்துவத்தையும் பேணி வளர்க்க விரிவான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதுடன் கிராமப் பகுதிகளில் இறப்புக்குப் பின்னரும் சாதி வேற்றுமையை களைந்திடும் வகையில் சமத்துவ மயானம் பயன்பாட்டில் உள்ள கிராமங்களுக்கு ரூ.10 இலட்சம் பரிசுத் தொகை வழங்கும் திட்டம் 2021 ஆம் ஆண்டு இவ்வரசால் கொண்டு வரப்பட்டு கடந்த 03 ஆண்டுகளாக கிராமங்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசுப்பணி, ‘ஓய்வூதியம் மற்றும் வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் இவ்வரசு பொறுப்பேற்றவுடன் முந்தைய நிலுவை இனங்கள் உள்ளிட்ட 360 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளும் , 615 நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமும், 138 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் 68 நபர்களுக்கு கல்வி உதவித் தொகை ஆகியவைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கெல்லாம் சிறப்பு சேர்க்கும் வகையில் நடப்பாண்டில் அனைத்து அலுவலர்களுக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் விதிகளை அனைத்து நிலை அலுவலர்களும் அறிந்து கொள்ளும் வகையில் விரிவான பயிற்சி அளிக்க ரூ.3.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டார்கள்.
இதன்மூலம் வன்கொடுமை வழக்குகளை கையாள்வதில் அனுபவம் பெற்ற மாண்புமிகு நீதியரசர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் சிறப்பான பயிற்சி வழங்கப்படுவதுடன் அவர்களின் ஆழமான அனுபவங்களின் வாயிலாக வன்கொடுமை வழக்குகளை கையாள்வதற்கும் சாதிய வன்கொடுமைகள் அற்ற சமத்துவ மாநிலமாக தமிழகத்தை வளர்த்தெடுக்க முதலமைச்சர் அவர்களின் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக நிற்பதுடன், முதற்கட்டமாக இத்துறையின் முதல்நிலை கள அலுவலர்களான மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள், பழங்குடியினர் திட்ட அலுவலர்கள் மற்றும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சியினை துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மேனாள் நீதியரசர் கே.சந்துரு அவர்கள், மேனாள் நீதியரசர் டி.ஹரி பரந்தாமன், வழக்கறிஞர் கே. திலகேஸ்வரன், சபாய் கரம்சாரி இயக்க தேசிய உறுப்பினர் தீப்தி சுகுமார், சென்னை சமூகப்பணி கல்லுரரி புலத்தலைவர் முனைவர் ஆர்.சுபாஷினி அவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் க.லட்சுமி பிரியா இ.ஆ.ப., அவர்கள், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறை தலைவர் டாக்டர்.மகேந்தர் குமார் ரத்தோர்ட் இ.கா.ப., அவர்கள் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் த. ஆனந்த் இ.ஆ.ப., ஆகியோர் கலந்துகொண்டனர்.