அக்ரா: சிறந்த அரசியல்வாதி, உலகளாவிய தலைமைத்துவத்தை பாராட்டி பிரதமர் மோடிக்கு கானாவின் தேசிய விருதை வழங்கி அந்நாட்டு அதிபர் ஜான் டிராமணி மஹாமா கவுரவித்தார். பிரதமர் மோடி 8 நாட்களில் 5 நாடுகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணம் மேற்கொண்டது. முதல் கட்டமாக அவர் மேற்கு ஆப்ரிக்க நாடான கானாவுக்கு நேற்று முன்தினம் சென்றடைந்தார். 30 ஆண்டுகளில் இந்திய பிரதமர் கானாவுக்கு செல்வது இதுவே முதல் முறை என்பதால், கானா அதிபர் ஜான் டிராமணி மஹாமா விமான நிலையத்திற்கு நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். இரவு விருந்து அளித்து கவுரவித்தார்.
இந்நிலையில், பயணத்தின் 2ம் நாளான நேற்று பிரதமர் மோடிக்கு கானாவின் உயரிய தேசிய விருதான ‘தி ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் கானா’ விருதை அதிபர் மஹாமா வழங்கி கவுரவித்தார். இந்த விருது பிரதமர் மோடியை சிறந்த அரசியல்வாதியாகவும், அவரது உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரித்தும் வழங்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விருதை பெற்ற பிரதமர் மோடி, ‘‘இந்த விருது எனக்கு கிடைத்த பெருமை மற்றும் மரியாதைக்குரிய விஷயம். 140 கோடி இந்தியர்கள் சார்பாக இந்த விருதை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். இந்த விருது மரியாதை மட்டுமல்ல, வலுவான இந்தியா-கானா நட்புறவை நோக்கி தொடர்ந்து பாடுபட வேண்டுமென்பதற்காக எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பும் கூட. இந்தியா எப்போதும் கானா மக்களுடன் துணை நிற்கும். நம்பகமான நண்பராகவும் வளர்ச்சிக்கான கூட்டாளியாகவும் தொடர்ந்து பங்களிக்கும். இந்த விருது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பை மேலும் ஆழப்படுத்துகிறது’’ என்றார்.
இந்த விருது இதற்கு முன் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத், தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஐநா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான், 2018ல் வேல்ஸ் இளவரசராக இருந்த தற்போதைய மன்னர் 3ம் சார்லஸ், மொராக்கோ மன்னர் 6ம் முகமது மற்றும் இத்தாலியின் முன்னாள் அதிபர் ஜியோர்ஜியோ நபோலிடானோ உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, அதிபர் மஹாமா தலைமையில் இருநாட்டு பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. இதில், இரு தலைவர்களும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, உணவு பாதுகாப்பு, மருந்துகள், குறிப்பாக தடுப்பூசிகள் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரைவுபடுத்த முடிவு செய்தனர். விவசாயத்தில் அதிபர் மஹாமாவின் பீட் கானா திட்டத்திற்கு பிரதமர் மோடி ஆதரவளிப்பதாக தெரிவித்தார். மேலும், இந்தியா, கானா இடையேயான இருவழி வர்த்தகத்தை அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கவும் இரு தரப்பினரும் இலக்கு நிர்ணயித்துள்ளனர். மோடி-மஹாமா பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் கலாச்சாரம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை வழங்கும் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தீவிரவாதம் மனிதகுலத்தின் எதிரி என்பதில் இரு தரப்பினரும் ஒருமனதாக இருப்பதாகவும், தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்ப்பதில் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டதாகவும் ஊடக சந்திப்பில் தெரிவித்தபிரதமர் மோடி கானாவின் ஒத்துழைப்புக்காக நன்றி கூறினார். மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் நடக்கும் மோதல்கள் குறித்து இரு தரப்பினரும் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியதாகவும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண அழைப்பு விடுத்ததாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதையடுத்து, கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘‘உலகளாவிய நிச்சயமற்ற தன்மை நிலவும் இந்த காலகட்டத்தில், இந்தியாவின் ஜனநாயக ஸ்திரத்தன்மை நம்பிக்கையின் கதிராக பிரகாசிக்கிறது. இந்தியாவின் விரைவான முன்னேற்றம் உலகளாவிய வளர்ச்சிக்கு ஒரு ஊக்கியாக உள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, உலகிற்கான பலத்தின் தூணாக உள்ளது.
வலுவான இந்தியா, நிலையான மற்றும் வளமான உலகத்திற்கு பங்களிக்கும். உலகளாவிய உயர்மட்ட அமைப்புகளில் ஆப்பிரிக்காவிற்கான சரியான இடத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். எங்கள் தலைமையின் கீழ் ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பினரானதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்’’ என்றார். இறுதியாக, ஆப்பிரிக்க சுதந்திர இயக்கத்தின் முக்கிய தலைவரான கானாவின் நிறுவனரும் அதிபருமான குவாமே நக்ருமாவின் நினைவு பூங்காவுக்கு சென்ற பிரமதர் மோடி அங்கு அஞ்சலி செலுத்தினார்.
* டிரினிடாட் டொபாகோ புறப்பட்டார்
கானாவில் 2 நாள் பயணத்தை நேற்று நிறைவு செய்த பிரதமர் மோடி 2ம் கட்டமாக நேற்று மாலை டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டிற்கு புறப்பட்டார். டிரினிடாட் டொபாகோ நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அதைத் தொடர்ந்து, 3ம் கட்டமாக அர்ஜென்டினா செல்லும் பிரதமர் மோடி, வரும் 6, 7ம் தேதிகளில் பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.