வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடென் மீண்டும் களமிறங்கி உள்ளார். இதனைதொடர்ந்து அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் லாஸ் வேகாசில் நடந்த கூட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சுவாசு கோளாறு உள்ளிட்டவை ஏற்பட்டது. இதனால் சந்தேகத்தின் பேரில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘‘அதிபருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருக்கின்றது. அவர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார். அதிபர் பைடன் டெலாவேரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வார். வீட்டில் இருந்தே பணிகளை மேற்கொள்வார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபர் ஜோ பைடன் தனது எக்ஸ் பதிவில், ‘‘என் உடல்நிலை சரியில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தேர்தலில் இருந்து விலகுமாறு அவருக்கு அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், முக்கியமான கட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை நிறுத்தியுள்ளார்.