புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்றுமுன்தினம் வானொலி, தொலைக்காட்சியில் சுதந்திர தின உரையாற்றினார். அப்போது காந்தி, படேல், நேதாஜி, அம்பேத்கர், பகத் சிங், சந்திர சேகர் ஆசாத் என விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற எண்ணற்ற தலைவர்களின் பெயரை பட்டியலிட்டார்.ஆனால், விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய நேருவின் பெயரை ஜனாதிபதி முர்மு சொல்லவில்லை.
இந்நிலையில் நேருவின் பெயரை தவிர்த்த ஜனாதிபதி உரைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிடுகையில்,கடந்த 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் சுதந்திரத்தை இந்தியாவுக்கு அறிவித்தார் ஜவஹர்லால் நேரு. இந்திய மக்களின் முதல் சேவகன் நான் என அவர் ஆகஸ்ட் 15, 1947 அன்று ரேடியோவில் பேசினார். தேசத்திற்கான அவரது செய்தி ஆகஸ்ட் 15, 1947 அன்று காலை செய்தித்தாள்களில் வெளியானது.
ஜனாதிபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் சுதந்திர இயக்கத்தின் பல முக்கிய பிரமுகர்கள் குறிப்பிட்டிருந்தாலும்,10 ஆண்டுகள் பிரிட்டிஷ் சிறையில் இருந்த நாட்டின் முதல் பிரதமரின் பெயர் குறிப்பிடப்படாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நாட்டின் வரலாற்றிலிருந்து அவரை அழிக்கவும் அகற்றவும் தொடரும் பிரசாரத்தின் ஒரு பகுதி இது என்று குறிப்பிட்டுள்ளார்.