சென்னை: ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கி வரும், கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் நாளை பங்கேற்பதற்காக, இன்று சென்னை வருகிறார். இதனால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா நாளை 27-ம் தேதி நடக்கிறது.. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவர்களை கவுரவிக்க உள்ளார்.
ஜனாதிபதி கலந்து கொள்ளும் இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், இணை அமைச்சர்கள் ஸ்ரீபாத் நாயக், சாந்தனு தாக்குர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பெங்களூருவில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் இன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு, 6.50 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறகு விமான நிலையத்திலிருந்து காரில் சாலை வழியாக கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று இரவு அங்கு தங்குகிறார். நாளை காலை 9 மணியில் இருந்து 9.30 மணி வரை, ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். அதன் பின்பு ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு, ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் செல்கிறார்.
அங்கு நடக்கும் 8வது பட்டமளிப்பு விழாவில் காலை 10.15 மணி முதல் 11.15 மணி வரை கலந்து கொள்கிறார். அதன் பின்பு காரில் புறப்படும் குடியரசு தலைவர், பகல் 11.55 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு குடியரசு தலைவருக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் வழியனுப்பு நிகழ்வு நடக்கிறது. தொடர்ந்து பகல் 12.05 மணிக்கு, இந்திய விமானப்படை தனி விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். இந்நிலையில் ஜனாதிபதி வருகையையொட்டி சென்னை விமானநிலையம் உள்ளிட்ட பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.