வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்ற பிறகு டிரம்ப் பல்வேறு அதிர்ச்சிகரமான முடிவுகளை எடுத்தார். குறிப்பாக, வர்த்தக பற்றாக்குறையை சரி செய்யவும், போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத குடியேற்றங்களை கட்டுப்படுத்தவும் இந்தியா, சீனா உட்பட பல உலக நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதித்தார்.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கூடுதல் வரி விதிப்பை டிரம்ப் அரசு 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தது. அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்து தங்கள் பொருட்களை அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வந்தால் அதற்கும் கூடுதல் வரியை டிரம்ப் விதித்தார். அத்தனை நிறுவனங்களும் அமெரிக்காவிலேயே பொருட்களை உற்பத்தி செய்ய கட்டாயப்படுத்தினார். இதனால், பல்வேறு நிறுவனங்களும் மாகாண அரசுகளும் டிரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பை எதிர்த்து நியூயார்க்கில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் டிரம்ப்பால் நியமிக்கப்பட்ட நீதிபதி டிமோதி ரீப், முன்னாள் அதிபர் ஒபாமாவால் நியமிக்கப்பட்ட கேரி காட்ஸ்மேன் மற்றும் ஜேன் ரெஸ்டானி ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
டிரம்ப் நிர்வாகம் தரப்பில், ‘‘அமெரிக்காவுக்கு எதிராக பல நாடுகள் பெரிய அளவில் வர்த்தக பற்றாக்குறை கொண்டுள்ளன. இது அமெரிக்க மக்களுக்கு, நமது தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். அமெரிக்க தொழில்துறை தளத்தை பலவீனப்படுத்திய தேசிய அவசர நிலைக்கு சமம். அதனால்தான் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ் டிரம்ப் வரிகளை உயர்த்தினார்’’ என வாதாடப்பட்டது.
இதற்கு மனுதாரர்கள் தரப்பு, ‘‘வர்த்தகப் பற்றாக்குறை அவசரநிலை அல்ல. ஏனெனில் அமெரிக்கா கடந்த 49 ஆண்டுகளாக உலகின் பிற பகுதிகளுடன் வர்த்தகப் பற்றாக்குறையை கொண்டிருக்கிறது. பொதுவாக இதுபோன்ற முடிவுகள் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றியே கொண்டு வர முடியும். ஆனால் அதை தவிர்க்கவே அவசரகால அதிகார சட்டத்தை டிரம்ப் தவறாக பயன்படுத்தி உள்ளார்’’ என்றனர்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், டிரம்ப் நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அவர்கள் அளித்த தீர்ப்பில், நாட்டின் வர்த்தக கொள்கையை அவரது விருப்பப்படி முடிவெடுக்க முடியாது என்றும் கண்டித்தனர். 1977 சர்வதேச அவசரகால அதிகார சட்டத்தின் கீழ், உலகளாவிய மற்றும் பழிவாங்கும் வரி உத்தரவுகள், அதிபருக்கு வழங்கப்பட்ட எந்தவொரு அதிகாரத்தையும் மீறும் செயல் என்றனர். எனவே, டிரம்பின் வரி உத்தரவுகள் சட்டவிரோதம் என அறிவித்து அதை ரத்து செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு உடனடியாக மேல்முறையீடு செய்துள்ளது.
அடுத்து என்ன நடக்கும்?
சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை அமல்படுத்துவது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கும் தடை உறுதி செய்யப்பட்டால், டிரம்ப்பால் அவர் நினைத்தபடி வரியை விதிக்க முடியாது. அதே சமயம், 1974ம் ஆண்டு வர்த்தக சட்டத்தின் பிரிவு 122ன் கீழ் அமெரிக்காவுடன் வர்த்தக பற்றாக்குறை கொண்ட நாடுகள் மீது அமெரிக்க அதிபரால் வரி விதிக்க முடியும். ஆனால் அதிகபட்சம் 15 சதவீத வரி, அதுவும் 150 நாட்களுக்கு மட்டுமே விதிக்கும் அதிகாரம் உள்ளது.
வரி சலுகை தருவதாக போரை நிறுத்தினோம்
இந்த வழக்கில், அமெரிக்க வர்த்தக துறை அமைச்சர் ஹாவர்ட் லுட்னிக் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில், ‘அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பில் சலுகை தருவதாக கூறிய பின்னரே இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் முழு போரை தவிர்ப்பதற்கு ஒப்புக்கொண்டன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வரி விதிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமெரிக்க அரசு குறிப்பிட்டுள்ளது.