Wednesday, February 21, 2024
Home » குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றம் திறக்கப்பட்டதும், சபாநாயகர் இல்லாமல் நாட்டுப்பண் இசைக்கப்பட்டதும் ஏன்?: சு.வெங்கடேசன் கேள்வி

குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றம் திறக்கப்பட்டதும், சபாநாயகர் இல்லாமல் நாட்டுப்பண் இசைக்கப்பட்டதும் ஏன்?: சு.வெங்கடேசன் கேள்வி

by Lavanya

சென்னை: குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றம் திறக்கப்பட்டதும், சபாநாயகர் இல்லாமல் நாட்டுப்பண் இசைக்கப்பட்டதும் ஏன்? என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் அவமானப்படுத்தப்பட்டது டேனிஸ் அலி மட்டுமல்ல, இந்தியாவின் மாண்பும், நாடாளுமன்றத்தின் மதிப்பும். எனவே விளக்கம் அளிக்க வேண்டியது ரமேஷ் பிதுரி மட்டுமல்ல எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 21ம் தேதி வியாழன் அன்று மக்களவையில் சந்திராயன்-3 வெற்றி பற்றி விவாத நிகழ்வாக நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டது. பகலில் விவாதம் நடைபெற்றது வழக்கம் போல மோடியை புகழ்ந்தால் தாராளமாக பேசலாம். விமர்சித்தால் உங்களின் நேரம் தானாக சுருக்கப்படும். நான் சந்திராயன் வெற்றி பற்றி பேசும் பொழுது. மூன்றரை நிமிடத்தில் மணியடிக்கப்பட்டது.

அதற்கு ஒரு உதாரணம். அவை வழக்கம் போல் ஆறு மணிக்கு முடியும் என்று தான் விவாதங்கள் நடத்தப்பட்டது. ஆனால் பின்னர் நடவடிக்கை நள்ளிரவு வரை நீண்டது. மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவாதம் நடைபெற்று வந்தது. அந்த அவையில் மசோதா நிறை வேற்றப்பட்டு அதன் பின்னர் மக்களவையில் அந்த தகவல் தெரிவிக்கப்பட்ட பின் அவை நடவடிக்கை முடிவுற வேண்டும். இயல்பாக 21 தேதி இரவு சுமார் 10 மணிக்கு மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறும் அதன் பின்னர் 22 ஆம் தேதி அந்த செய்தியை மக்களவையில் பதிவு செய்து பின்னர் நாட்டுப்பண் பாடப்பட்டு கூட்டத்தொடரை முடிப்பார்கள். அது தான் மரபு. ஆனால் திடீரென நிகழ்சி நிரல் மாற்றமடைந்தது. அன்று இரவே கூட்டதொடரை முடிக்க தயாரானார்கள். அதனால் மாநிலங்களவையில் மசோதா நிறைவேறி வரும் வரை மக்களவையை நடத்த முடிவு செய்தார்கள். கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேர ஒதுக்கிட்டுப்படி அனைவரும் இரவு 7 மணிக்குள் பேசி முடித்தோம்.

ஆனால் அவையை நடத்த வேண்டும் என்பதற்காக அதன் பிறகு பலருக்கும் பேச வாய்ப்பளித்தனர். விவாதத்தின் குறுக்கீடு என்ற அடிப்படையில் அறிவியல் மற்றும் விண்வெளித்துறைக்கான தனிப்பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஜிஜேந்தர் சிங அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் பேசினார் . ஆனால் மாநிலங்களவையில் ஓட்டெடுப்பு முடிய இன்னும் இரண்டு மணி நேரமாகும் என்று சொன்னார்கள். எனவே அமைச்சரின் பேச்சுக்குப்பின் மீண்டும் விவாதம் தொடர்ந்தது. பொதுவாக காலையிலிருந்தே சந்திரயான் வெற்றியின் பாராட்டு என்ற பெயரில் பாஜகாவினர் புராணக் கட்டுக்கதைகளை அளவில்லாமல் அள்ளிவிட்டுக்கொண்டிருந்தனர். நான் நண்பகல் சுமார் 3.30 க்கு பேசினேன். அப்பொழுதே நாடாளுமன்றம் கோயில் மடங்களில் நடைபெறும் கதாகாலட்சியம் போல் மாறிவிட்டதை சுட்டிக்காட்டி உரையாற்றினேன். நேரம் செல்ல செல்ல ஆளுங்கட்சியினரின் உரை மிக மோசமடைந்தபடி இருந்தது. சந்திரயானின் வெற்றியை புராணக்கதைகளோடு இணைத்து மோடிக்கு புகழாரம் சூட்ட பெரும்பாடு பட்டனர்.

எதிர் கட்சிகளின் உரைகளுக்கு மோசமான எதிர்வினைகளை புரிந்துவந்தனர். இந்நிலையில் தான் பாஜகவின் ரமேஷ் பிதுரி இரவு சுமார் பத்து மணிக்கு பேசத்துவங்கினார். பொதுவாக அவர் எப்பொழுது பேசினாலும் எதிர்கட்சிகளை மிக மோசமாக, மட்டரகமாக பேசுவதே வழக்கமாக கொண்டவர். அன்றும் மோசமாக பேசினார். எதிர்கட்சி வரிசையில் இருந்தவர்களை பார்த்து பயங்கரவாதிகள் என்றார். நாங்கள் அனைவரும் எழுந்து எங்கள் ஆட்சேபனையை தெரிவித்து குரல் எழுப்பினோம், அப்பொழுது இன்னும் மோசமாக பேச ஆரம்பித்தார். திரு டேனிஸ் அலியைப் பார்த்து வசை பொழிந்தார். அவர் என்ன சொல்கிறார் என்று எங்களுக்கு முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை. ஆனால் அவரின் வசைகேட்டு டேனிஸ் அலி துடித்துப்போனார். அவையில் இவ்வளவு அநாகரீகமாக பேசுவதை எப்படி அனுமதிக்கிறீர்கள் என்று ஆளுங்கட்சியினரைப் பார்த்து பெருங்குரலில் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவருடன் நேர்ந்து நாங்கள் அனைவரும் வலிமையான எதிர்ப்பை தெரிவித்தோம்.

நான் தான் அவர் அருகில் இருந்தேன். அவரது உடல் நடுங்கியது என்றே சொல்ல வேண்டும். அவர் ஏன் அவ்வளவு பதட்டமாகி குரல் கொடுக்கிறார் என்று எங்களால் முழுமையாக புரிந்துக் கொள்ள முடியவில்லை. நான் அவரை தோள்தொட்டு சமாதான படுத்த முயற்சி செய்தேன். சிறிது நேரத்தில் முன்வரிசையில் இருந்த கனிமொழி கருணாநிதி எங்கள் வரிசைக்கு வந்து சமாதானப்படுத்த முயற்சித்தார். டேனிஸ் அலி தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதில் உறுதியுடன் இருந்தார். நாங்கள் ஒரு பக்கம் அவரை சமாதானப்படுத்தவும் மறுபக்கம் ஆளுங்கட்சியினரின் நடவடிக்கையை கண்டித்து குரல் எழுப்பியப் படியும் இருந்தோம். இந்த நேரத்தில் ஆளுங்கட்சி வரிசையில் இருந்த அமைச்சர் அனுராக்தாக்கூர் எங்களை நோக்கி எதிர்கட்சி வரிசைக்கு வந்து சமாதானப்படுத்த ஓரிரு வார்த்தையை சொன்னார். இவர் தான் டில்லி தேர்தல் கலவரத்தின் பொது ” “கோலி மாரோ” அதாவது எங்கள் எதிரிகளை சுட்டுத்தள்ளுவோம் என்று பேசியவர்.

அதாவது ரமேஷ் பிதுரி வகை பேச்சுகளை அதைவிட மோசமாக பேசியவர். பேசும் முன் இணை அமைச்சராக இருந்தவர் பேசிய பின்னர் கேபினட் அமைச்சரானார். இவர் தான் சமாதானம் பேச வந்தவர். அவரது குரலுக்கு எந்த மதிப்பும் தர நாங்கள் தயாராக இல்லை. வந்தவர் அதே வேகத்தில் திரும்பிப் போய்விட்டார். அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. நாங்கள் 10 பேர் தான் இருந்தோம் ஆனாலும் அவையில் பெரும் போராட்டத்தை டேனிஸ் அலிக்கு ஆதரவாக நடத்திக் கொண்டிருந்தோம். இறுதியாக அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து வருத்தம் தெரிவித்தார், அதன் பின்னரே நாங்கள் அவை நடவடிக்கையை அனுமதித்து இருக்கையில் அமர்ந்தோம். அதன் தொடர்சியாக கூட ரமேஷ் பிதுரி குறைந்த பட்சம் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அவை இரவு சுமார் 11.30 க்கு முடிவுற்றது. மறு நாள் காலை தான் ரமேஷ் பிதுரி பேசியதன் முழு அர்த்தத்தையும் தெரிந்துகொள்ள முடிந்தது. அவர் பயன்படுத்திய வார்த்தைகள் எழுத முடியாத அநாகரீகத்தின் உச்சம்.

எனவே அவற்றை இப்பொழுது குறிப்பிடவில்லை. டேனிஸ் அலியின் உடல் ஏன் அவ்வளவு நடுங்கியது? ஏன் அவ்வளவு கொந்தளித்துப் பேசினார் என்பதை அர்த்தம் தெரிந்த பின்னரே புரிந்து கொள்ள முடிந்தது. இது பாஜக ஊட்டி வளர்க்கும் வெறுப்பு அரசியலில் விளைச்சலாகும். பாசிசத்தின் அடிப்படை குணம் வெறுப்பை உமிழ்ந்து கொண்டே இருப்பது. பிரதமர் துவங்கி எல்லோரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறுப்பையும், நஞ்சையும் உமிழ்ந்துக் கொண்டே இருக்கின்றனர். 17 ஆவது நாடாளுமன்றத்தில் எதிர் கட்சி எம்பி களைப்பார்த்து தீவிரவாதிகள், பாகிஸ்த்தான் கைகூலிகள், தேச துரோகிகள் என்று எண்ணற்ற முறை சொல்லியிருக்கிறார்கள். இவை எல்லாவற்றின் தொடர்ச்சி மற்றும் உச்சம் தான் ரமேஷ் பிதுரி பேசியது. சபாநாயகர் உறுதியான நடவடிக்கையாக எடுக்க வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தியுள்ளோம். இந்த நேரத்தில் டேனிஸ் அலியின் கரங்களை இறுகப் பற்றி நிற்போம். ரமேஷ் பிதுரிக்கு எதிராக, பாஜகவுக்கு எதிராக, வெறுப்பை உமிழும் பாசிசத்திற்கு எதிராக மனித மாண்புகளை உயர்த்திப்பிடிப்போம். இந்தியா தனது சகோதரத்துவத்தை அடிப்படைவாத கும்பலிடம் ஒரு போதும் இழக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

two × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi