திருவொற்றியூர்: திருவொற்றியூர், தாங்கல், பீர் பயில்வான் தெருவை சேர்ந்தவர் அல்தாப், சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மகன் நவ்பில்(17), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு டியூஷன் முடித்துவிட்டு நவ்பில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் வெளியே தேங்கியிருந்த மழை நீரில், சேதமடைந்த மின் வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்ட இடத்தில் நவ்பில் நடந்து சென்ற போது மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் நவ்பில்லை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர் நவ்பில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார் நவ்பில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாங்கல் அருகே திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும், மின்வாரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதையடுத்து, அங்கு வந்த கே.பி.சங்கர் எம்.எல்.ஏ, மண்டல குழு தலைவர் தனியரசு மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமாதானம் பேசினார். அப்போது மின்வாரிய அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து, பிரேத பரிசோதனை முடிந்து நவ்பில் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது கே.பி.சங்கர் எம்எல்ஏ நவ்பில் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.மேலும், தனது சொந்த நிதியாக ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கியதோடு, தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மண்டல குழு தலைவர் தனியரசு உயிரிழந்த நவ்பில் சகோதரியின் கல்வி செலவை ஏற்பதாக உறுதியளித்தார்.