*சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்
கூடலூர் : பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பேரிடர் மேலாண்மை ஆய்வுக்கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் கூடலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வருவாய், நெடுஞ்சாலை, தீயணைப்பு மற்றும் மீட்பு, சுகாதாரம், மருத்துவம், தோட்டக்கலை, உள்ளாட்சி, மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள், ஆபத்து அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது: பருவமழை காலங்களில் மாவட்டத்தில் ஏற்படும் பேரிடர் பாதிப்புகளால் பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளுடன் இணைந்து எடுத்து வரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் இதுவரை மழை பாதிப்புகளில் பொதுமக்களுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
கடந்த வருட பருவமழை காலத்தில் ஜூன் மாதம் வரை 235 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 239 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது.
நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டங்களில் துணை ஆட்சியர்கள் தலைமையில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, 48 மண்டல பூத்துகள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பாதிப்புகள் ஏற்படக்கூடிய 253 பகுதிகள் கண்டறியப்பட்டு 456 பாதுகாப்பு மையங்கள் அந்தந்த பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக மீட்பு வாகனங்கள் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 3,500 முதல் நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தயார் நிலையில் உள்ள 200 பயிற்சி பெற்ற ஆபத் மித்ரா தன்னார்வலர்களுக்கு மீண்டும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு வீரர்கள் 40 பேர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். தற்போதுவரை பெய்துள்ள பருவமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு வீடு உள்ளிட்ட மொத்தம் 18 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. நான்கு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. சேதம் அடைந்த வீடுகளுக்கு நிவாரண உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள விவசாய பாதிப்புகள் குறித்து தோட்டக்கலை துறை சார்பில் கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு உரிய உதவித்தொகை வழங்கப்படும்.
கடந்த ஆட்சியில்போல் இல்லாமல் நமது ஆட்சியில் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்காக அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களில் ஏற்பட்ட மழை பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட சாலை, பாலங்கள் மற்றும் நகராட்சி பேரூராட்சி ஊராட்சிகளில் உள்ள வளர்ச்சி பணிகளுக்காக 210 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அல்லூர், நாடுகாணி, தேவாலா பகுதிகளில் மழையால் ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகளுடன் பார்வையிட்டு துரிதமாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உறுதியளித்தார்.