சென்னை: சுங்க வரி கட்டண உயர்வை கண்டித்து, சென்னை வானகரம் சுங்கச்சாவடியை பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கவரி கட்டண உயர்வை கண்டித்து, தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் நேற்று வானகரம் சுங்கச்சாவடியை தேமுதிகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: வாகனங்கள் வாங்கும்போதே வரிகள் கட்டுகிறோம். எந்த சுங்கச்சாவடிகளிலும் சாலைகள், கழிவறை வசதிகள் சரியில்லை. சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு உரிய ஊதியம், பாதுகாப்பு கிடையாது.
தொடர்ந்து சுங்கச்சாவடி கட்டணம் உயர்வதற்கு காரணம் என்ன? பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிட்டது. சுங்க கட்டணம் உயர்ந்து போனால், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. விலை உயர்வுக்கு சுங்க கட்டணம் மிக முக்கிய காரணமாக உள்ளது. காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும். தமிழகத்தில் 63 சுங்கச்சாவடிகளை வைத்து வசூல் செய்து வருகின்றனர். பல மாநிலங்களில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது இல்லை. தமிழகத்தில் மட்டும் ஏன் வஞ்சனை செய்கிறது ஒன்றிய அரசு.
சுங்க கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்த தான் ஆர்ப்பாட்டம். ஒன்றிய அரசு காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும். தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி குறித்து எங்களது நிலைப்பாட்டை தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார். 75 ஆண்டுகளுக்கு பிறகு பாரத் என்று பெயர் மாற்றம் கொண்டு வந்தால், அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் யாரும் இல்லை. நாட்டின் பெயரை மாற்றுவது சுலபமும் கிடையாது, ஏற்றுக்கொள்ள கூடியதும் இல்லை. ஒரு கூட்டணிக்கு நாட்டின் பெயரை வைப்பது தவறு. அதேபோல ஒரு நாட்டின் பெயரை மாற்றி வைப்பதும் தவறான ஒரு விஷயம்.