சென்னை: வடபழனியில் 4வது மாடியில் இருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனி பாலாஜி அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ்(28). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர், தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி சரஸ்வதி(23) மற்றும் ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சரஸ்வதி தற்போது கர்ப்பமாக உள்ளார்.
வழக்கம் போல் நேற்று இரவு சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தூங்கியுள்ளார். திடீரென தனது மனைவி அலறும் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த போது, மனைவி குடியிருப்பு வீட்டின் 4 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று எலும்பு முறிவுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதை பார்த்த, சுரேஷ் அதிர்ச்சியடைந்து தனது மனைவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் சம்பவம் குறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்திய போது, சுரேஷ் மனைவி சரஸ்வதி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது. இருந்தாலும் போலீசார் அவரது கணவரிடம் தற்கொலை முயற்சி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.