தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டனஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு கர்ப்பிணி வீட்டில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமையிலான குழுவினர் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அங்கு கர்ப்பிணி பெண்ணுக்கு கரு கலைப்பு செய்யும் பணியில், நர்ஸ் ஒருவர் ஈடுபட்டிருந்தார். உடனடியாக கருக்கலைப்பு மாத்திரையை கைப்பற்றிய அதிகாரிகள், அந்த கர்ப்பிணி பெண்ணிடம் விசாரித்தனர்.
இதில், கடந்த 8 வருடத்திற்கு முன்பு திருமணமான அவருக்கு, ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளது. தற்போது மீண்டும் கர்ப்பமடைந்த பெண், புரோக்கர் ஒருவர் மூலமாக கருவின் உள்ள
பாலினம் குரித்து ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது கருவில் உள்ள குழந்தை பெண் என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், 3வதாக பெண் குழந்தை வேண்டாம் என கருக்கலைப்பு செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த குள்ளப்பநாயக்கனூரை சேர்ந்த நர்ஸ் சித்ராதேவி (42) என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.
அதன் பேரில், அவர் கர்ப்பிணி பெண்ணின் வீட்டுக்கு வந்து கருக்கலைப்பில் ஈடுபட்டதும், சித்ராதேவி டிப்ளமோ நர்சிங் படித்துள்ளதும் தெரியவந்தது. இது குறித்து மருத்துவ குழுவினர் கொடுத்த புகாரின் பேரில், பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து, சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட சித்ராதேவியை கைது செய்தனர். ஏற்கனவே, கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறிய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வீட்டிற்கே நேரில் வந்து கர்ப்பிணிக்கு சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட நர்ஸ் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.