பெரம்பலூர்: தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களை சேர்ந்த 5 கர்ப்பிணிகளுக்கு, புரோக்கர் தங்கமணி என்பவர் மூலம் பெரம்பலூரில் உள்ள மெடிக்கல் ஷாப் மாடியில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முருகன் (55) என்பவர் கண்டறிந்து கூறி உள்ளார். அவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கைதான முருகன் முறையாக மருத்துவ படிக்காமல் தன்னை சோனலிஜிஸ்ட் என கூறி ஏமாற்றி வந்து உள்ளார்.
இதற்கு முன்பு தனியார் மருத்துவமனையில் டாக்டருக்கு உதவியாளராக பணியாற்றி வந்து உள்ளார். அந்த அனுபவத்தில் மனைவி கயல்விழி உட்பட 4 பேர் உடந்தையுடன் கருவில் உள்ள பாலினத்தை கண்டறிந்து சொல்வதாக கூறி பல லட்சம் சம்பாதித்து உள்ளார். அதிகாரிகளை கண்டு தப்பியோடிய 5 பேரை தேடி வருகிறோம். கருவில் இருக்கும் குழந்தையை தெரிந்து கொள்ள ஒரு கர்ப்பிணிக்கு ரூ.15,000, வண்டி வாடகை ரூ.1500 என மொத்தம் ரூ.16,500 கட்டாய வசூல் செய்யப்பட்டுள்ளது. முருகன் தமிழகம் முழுவதும் உள்ள புரோக்கர்கள் மூலம் கருக்கலைப்பு செய்து வந்து உள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.