பட்டுக்கோட்டை : தஞ்சாவூர் அருகே வீட்டிலயே சுயபிரசவம் பார்த்ததில் தாய், குழந்தை பலியானது தொடர்பாக கணவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெரு ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் செந்தில் (48). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (35). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் 6வது முறையாக வசந்தி கர்ப்பம் தரித்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11மணியளவில் பிரசவ வலி அதிகமானதால் வசந்தி தனக்கு தானே வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். அப்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்தாலும் வசந்திக்கு ரத்தப்போக்கு நிற்க வில்லை. இதனையடுத்து வசந்தி, தனது கணவரிடம் கூறினார். அவர் வசந்தியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தார். அப்போது வசந்தியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடலை அரசு மருத்துவமனையிலிருந்து அவரது கணவரும், உறவினர்களும் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலிருந்து நகர போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்ற சென்றனர். அப்போது வீட்டிற்குள் பெயிண்ட் அடிக்கும் ஒரு வாளியில் ரத்தக்கரை தெரிந்துள்ளது. உடனே போலீசார் அந்த வாளியை பார்த்த போது அந்த வாளிக்குள், வாயில் துணியை வைத்தும், கழுத்தில் நைலான் கயிற்றால் கற்றியும் பிறந்த குழந்தை இறந்து கிடந்தது. இதனையடுத்து போலீசார், இறந்து போன பிறந்த குழந்தை, வசந்தி ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வசந்தியின் அப்பா கோவிந்தராஜ் (61) பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், எனது மகள் வசந்தியும், புதிதாக பிறந்த ஆண் குழந்தையும் வீட்டில் இறந்து கிடப்பதாக எனது மருமகன் செந்தில் எனக்கு போன் செய்து தெரிவித்தார். அப்போது நான் அவர்களை அவர்களது வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டிற்குள் எனது மகள் வசந்தி படுத்த நிலையில் இறந்து கிடந்ததாகவும், குழந்தை வாயில் துணி சுற்றப்பட்டு இறந்த நிலையில் இருந்தது.
இவர்களது இறப்பில் எனக்கு சந்தேகம் உள்ளது என்று கூறியுள்ளார். இந்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றார். இதனிடையே கணவர் செந்திலிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதுபற்றி போலீசார் கூறுகையில், செந்தில் – வசந்தி தம்பதிக்கு இது 6வது குழந்தை. முதல் 3 குழந்தைகள் மருத்துவமனையில் பிறந்துள்ளது. அடுத்த பிறந்த 2 குழந்தைகளுக்கு வசந்தி தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார்.
தற்போது இந்த 6வது குழந்தையையும் அவரே தனக்குத்தானே பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளார். குழந்தைகளும், கணவரும் வீட்டில் வெளியே நின்று கொண்டிருந்த போது வசந்தி வீட்டின் கதவை சாத்திக்கொண்டு தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார். பிறந்த குழந்தையை தாயே கொலை செய்து வாளிக்குள் வைத்தாரா? அல்லது வேறு ஏதும் பிரச்னையா? என்பது குறித்து விசாரணையில் பின்னர் தெரியவரும் என்றனர்.