சென்னை: ‘‘இந்தியாவில் ஆண்டுக்கு 1.3 லட்சம் கருவிழிகள் கண் மருத்துவமனைகளுக்கு தேவைப்படுகின்றன’’ என கருவிழி சிறப்பு நிபுணர் டாக்டர் பிரீத்தி நவீன் தெரிவித்துள்ளார். நாடெங்கும், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை கண்தான விழிப்புணர்வு அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை டிடிகே சாலையில் உள்ள அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் இயக்குநர் டாக்டர் அதியா அகர்வால், டாக்டர் அகர்வால்ஸ் கண் வங்கியின் மருத்துவ இயக்குனரும், கருவிழி சிகிச்சையில் முதுநிலை சிறப்பு நிபுணருமான டாக்டர் பிரீத்தி நவீன், சென்னை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சமாய் சிங் மீனா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கண் தானம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பின்னர் டாக்டர் பிரீத்தி நவீன் நிருபர்களிடம் கூறியதாவது:
உலகெங்கிலும், பார்வைத்திறன் குறைபாடுகளினால் ஏறக்குறைய 40 மில்லியன் நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 8 மில்லியன் நபர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், இவர்களுள் 1.3 மில்லியன் நபர்கள் கருவிழி பாதிப்பினால் ஏற்பட்ட கார்னியல் குருட்டுத்தன்மை காரணமாக பார்வையை இழந்தவர்கள். இந்த நபர்களுக்கு முற்றிலுமாக பார்வைத்திறனிழப்பு ஏற்படாமல் தடுக்க ஒரு ஆண்டுக்கு சுமார் 1.3 லட்சம் கருவிழிகள் கண் மருத்துவமனைகளுக்கு தேவைப்படுகின்றன. ஆனால் 50 ஆயிரம் வரை மட்டுமே கண் தானம் கிடைக்கிறது. ஒரு ஜோடி கண்களைக் கொண்டு நான்கு நபர்களுக்கு பார்வை வழங்க முடியும்.
ப்ரீ-டெசிமெட் அகவணி கருவிழியமைப்பு என்ற தனித்துவமான மருத்துவ செயல்முறையை மேற்கொள்வதில் முன்னணி மருத்துவமனையாக டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை உள்ளது. இச்செயல்முறையில், ஒற்றை கருவிழி திசுவின் 25 மைக்ரான்கள் நோயாளியின் கண்ணில் பதியப்படும். இந்த சிகிச்சையின் மூலம் பார்வைத்திறன் பெற்றவர்களின் 40% நபர்கள் பொருளாதார ரீதியில் வசதியற்றவர்கள். கண் தானம் செய்ய விரும்பினால் 9444 444 844 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.