சாமியார்மடம் : குமரி மாவட்டம் சாமியார்மடம் அருகே வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி பள்ளியாடி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றியவாறு 2 டெம்போக்கள் வந்தன. அந்த டெம்போக்களை டிரைவர்கள் குறிப்பிட்ட பகுதியில் நிறுத்தி விட்டு திடீரென்று சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட முயன்றதாக கூறப்படுகிறது.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் உடனடியாக வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி தலைவர் ஜான்டென்சிங்கிற்கு தகவல் அளித்தனர்.
இதன்பேரில் அவரும் விரைந்து வந்தார். ஜான்டென்சிங் தலைமையில் திரண்ட பொதுமக்கள் சிறைபிடித்தனர். தொடர்ந்து தக்கலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு கழிவுகளை கொட்ட வந்த வாகனங்கள் தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதில் நட்டலம் ஊராட்சி தலைவர் ராஜகுமார், பேரூர் திமுக செயலாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.