மதுரை: திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்குமாறு நீதிமன்றம் எவ்வாறு உத்தரவு பிறப்பிக்க முடியும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருமணமான இளம் தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது விவாகரத்து அதிகமாகிறது. இதற்கு அடிப்படை காரணம் பாலியல் ரீதியான குறைபாடுகளும் பிரச்சனைகளுமே முக்கியமாக உள்ளது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்குமாறு நீதிமன்றம் எவ்வாறு உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியது. மேலும், இதுபோன்ற சட்டங்களை பிறப்பிப்பது குறித்து நாடாளுமன்றத்துக்குதான் அதிகாரம் உள்ளது என ஐகோர்ட் கிளை தெரிவித்த நிலையில், இந்த மனுவை தள்ளுபடி செய்தது.