தற்போது முற்றிலும் செயற்கை உணவைச் சார்ந்தே வெள்ளைக்கால் இறால் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒட்டு நுண்ணுயிரி சார்ந்த இறால் வளர்ப்பை மேற்கொள்வதன் மூலம் செயற்கை தீவன பயன்பாட்டின் அளவை வெகுவாக குறைக்கலாம். சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, இயற்கை முறையில் இதை மேற்கொள்ளலாம். நீரில் உள்ள பற்றுப் பொருள்களில் வளரும் தாவர, விலங்கின நுண்ணுயிரி மற்றும் பாக்டீரியாவின் கலவையே ஒட்டு நுண்ணுயிரி ஆகும். இறால் வளர்ப்புக்குளத்தில் பற்றுப் பொருட்கள் செயற்கையாக அமைக்கப்படுகிறது. ஒட்டு நுண்ணுயிரியின் கூட்டினங்கள் இயற்கை நீர்நிலைகளின் உணவியலில் முதல்நிலை உற்பத்தியாளராக செயல்படுகின்றன.
ஒட்டு நுண்ணுயிரிகளை உணவாக உட்கொள்ளும் விலங்கின நுண்ணுயிரிகளின் வளர்ச்சி பற்றுப் பொருட்களில் அதிகரிக்கிறது. ஒட்டு நுண்ணுயிரிகளின் சேர்க்கையானது அதிகப்படியான கரிமச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் ஒட்டு நுண்ணுயிரியான சையனோ பாக்டீரியாக்கள் அதிக மதிப்புகளைக் கொண்ட புரதச்சத்துக்களைக் கொண்டுள்ளது.நீர்வாழ் உயிரினங்களின் சூழ்நிலை அமைப்பில் தாவர நுண்ணுயிரிகளே முதல்நிலை உற்பத்தியாளர்கள். தாவர நுண்ணுயிரிகளே நீரில் கரைந்துள்ள கரிமத்தின் நிலைப்பாடு மற்றும் அதன் முறையான பயன்பாட்டினை நிர்ணயம் செய்கின்றன. நீர்நிலைகளில் ஒட்டு நுண்ணுயிரிகள் இருப்பின், அவை முதல்நிலை உற்பத்தியில் அதிக பங்கு வகிக்கிறது. ஊட்டச்சத்து குறைவாக உள்ள நீர்நிலைகளில் ஒட்டு நுண்ணுயிரியின் வளர்ச்சியானது நீரில் உள்ள தாவர நுண்ணுயிரியை விட அதிகம் காணப்படும். மேலும் ஒட்டுநுண்ணுயிரிகளின் கூட்டினங்களும், நீர்நிலையில் உள்ள கூட்டினங்களும் ஒன்றுபோல் காணப்படும். ஒட்டுநுண்ணுயிரிகள் அதிக கரிம மற்றும் புரதம் நிறைந்த உணவாக திகழ்கின்றன.
பண்டைய கால மீன் வளர்ப்பில் ஒட்டுநுண்ணுயிரியைப் பயன்படுத்தி மீன் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.நாகப்பட்டினம் மாவட்டம், வேட்டைக்காரனிருப்பு இறால் பண்ணையில், ஒட்டு நுண்ணுயிரி சார்ந்த வெள்ளைக்கால் இறால் வளர்ப்பு ஆய்வுரீதியில் மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்காக 5,000 ச.மீ வளர்ப்புக்குளம் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட குளத்தின் அடிமட்ட கழிவுகள் நன்கு வெடிக்கும் வரை காயவிடப்பட்டு, வெடிப்பு விட்ட அடிமட்ட மண் நீக்கப்பட்டு குளம் தயார் செய்யப்பட்டது. நன்கு தயார் செய்த குளத்தில் நீர் நிரப்பப்பட்டு, நீர்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நீர் சிகிச்சை செய்யும் முன் நண்டு மற்றும் பறவை வலை அமைக்கப்பட்டது. நீர் சிகிச்சை முடிந்த நான்காம் நாள் முதல் குளத்து நீரில் உரம் இடப்பட்டு பச்சையம் நன்கு பெருகிட செய்யப்பட்டது. குளத்துநீரில் வெளிர்பச்சையம் தயாராகும் நிலையில், முன்னரே தேர்வு செய்யப்பட்ட இறால் குஞ்சுகள் பொரிப்பகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு முறையே இருப்பு செய்யப்பட்டது.
இறால் வளர்ப்புக் குளத்தில் ஒட்டு நுண்ணுயிரியினைப் பெருக்கிட, பிளந்த மூங்கில் கம்புகள் பயன்படுத்தப்பட்டது. பிளந்த மூங்கில் கம்புகள் மூன்று அடி இடைவெளியில் மேல் மற்றும் கீழ் பகுதியில் கயிறு கொண்டு 20 மீட்டர் நீளம் கொண்ட தட்டிகளாக சேர்த்து கட்டப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட மூங்கில் தட்டிகள் குளத்தின் மையப்பகுதியில் 1½ மீட்டர் இடைவெளியில் ஒன்றின்பின் ஒன்றாக வரிசையாக செங்குத்தான நிலையில் நட்டு வைக்கப்பட்டது. இவ்வாறு நட்டு வைக்கப்பட்ட பிளந்த மூங்கில் கம்புகளில், முதல் 7 நாட்களுக்குப் பிறகு ஒட்டு நுண்ணியிரியின் வளர்ச்சி காணப்பட்டது.வளர்ப்புக்குளத்தில் மூங்கில் பற்றுப்பொருள், இறால் குஞ்சு இருப்பு செய்யப்பட்ட 20 நாட்களுக்கு பிறகு நட்டு வைக்கப்பட்டது. குளத்தில் நட்டு வைக்கப்பட்ட பிளந்த மூங்கில் கம்புகளில் இருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டதில் ஒட்டு நுண்ணுயிரியில் அதிக அளவிலான “டையடம்” குடும்பத்தைச் சேர்ந்த தாவர நுண்ணுயிரிகள் மற்றும் “கோப்பிபோட்ஸ்” (கடல் முகட்டுப் பூச்சிகள்) வகையைச் சேர்ந்த விலங்கின நுண்ணுயிரிகளின் வளர்ச்சி அதிகம் காணப்பட்டது. வளர்ப்புக் குளத்து நீரிலும் இவ்வின நுண்ணுயிரிகளே கண்டறியப்பட்டது.
ஒட்டு நுண்ணுயிரிகளின் தன்மையானது இறால் வளர்ப்பின் ஆரம்ப காலம் முதல் அறுவடை காலம் வரை நன்கு வளர்ந்த நிலையிலேயே காணப்பட்டது. மூங்கில் கம்புகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வுசெய்ததில், ஒட்டு நுண்ணுயிரிகள் இறால்களால் உட்கொள்ளப்பட்டது கண்டறியப்பட்டது. குளத்தில் சதுரமீட்டருக்கு 28 என்ற எண்ணிக்கையில் இறால்கள் இருப்பு செய்யப்பட்டது. இதே நாளில் இருப்பு செய்யப்பட்ட இரு குளங்கள் இதன் பரிசோதனை மாதிரியாக வைத்து, ஒப்பிட்டுப் பார்க்கையில் ஒட்டுநுண்ணுயிரி சார்ந்த இறால் வளர்ப்புக் குளத்தில் 108 நாட்களில் 32 கிராம் உடல் எடையினை அடைந்து அறுவடை செய்யப்பட்டது. ஆனால் பரிசோதனை மாதிரி குளங்கள்
140 நாட்கள் கடந்த பின்புதான் 32 கிராம் உடல் எடையினை அடைந்தது. பண்ணையின் அனைத்து குளங்களைக் காட்டிலும் பிளந்த மூங்கில் கம்பு வைத்து ஒட்டு நுண்ணுயிரி பெருக்கம் செய்யப்பட்டு இறால் வளர்க்கப்பட்ட குளத்தில், இயற்கையாகவே செயற்கை உணவு பயன்பாடு வெகுவாக குறைந்தே காணப்பட்டது. மேலும் இறாலின் அன்றாட வளர்ச்சியும் மற்ற குளங்களைக் காட்டிலும் அதிகமாகவே இருந்தது.இந்த ஆராய்ச்சியின் முதல்கட்ட நிலையில் இருந்து ஒட்டு நுண்ணுயிரி சார்ந்த வெள்ளைக்கால் இறால் வளர்ப்பு மூலம் பண்ணையாளர்கள் தீவன முதலீட்டினை குறைத்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்புடனும் இறால் வளர்ப்பு மேற்கொண்டு அதிக லாபம் ஈட்டிட முடியும் என்று கண்டறியப்பட்டது.
தொடர்புக்கு:
சே. விஜய் அமிர்தராஜ்: 99944 50248.