புதுடெல்லி: ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் இறுதி தேர்வு வரை வந்து தோல்வி அடைந்தவர்கள் பயன்பெறும் வகையில் பிரதிபா சேது என்ற திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்ளிட்ட பல பதவிகளுக்கு ஆண்டுதோறும் ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்துகிறது. இதற்கு ஆண்டுதோறும் பல லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் அதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கு ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு பெறுகின்றனர். ஐஏஎஸ் பதவிக்கு வெறும் 180 பேர் தேர்வாகின்றனர். முதன்மை தேர்வு, மெயின் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறுவோர், இறுதியாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர்.
இறுதி தேர்வு வரை வந்தவர்கள், கடைசியில் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறாததால், ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளை பெற முடியாமல் போய்விடுகிறது. இந்நிலையில் இறுதி தேர்வு வரை வந்து தோல்வி அடைந்த திறமையான நபர்களுக்கு ஒன்றிய அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் பிரதிபா சேது திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. முதன்மை தேர்வு, பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்று, இறுதி தேர்வில் தோல்வி அடைந்தவர்களை ஒன்றிய அரசு துறையிலும்,தனியார் நிறுவனங்களிலும் பணியமர்த்த இந்த திட்டம் வழிவகை செய்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.