Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பிரசாதம்!

சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி விக்கிரகம் ஸ்தாபிக்கப்பட்டு, நிர்மாணப் பணிகள் நடைபெற்றுவந்த சமயம். 1993-ம் வருட ஆரம்பம். தரிசனத்துக்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர்.அப்போது ஒருநாள் காஞ்சி மகா ஸ்வாமிகளைத் தரிசித்து ஆசிபெறச் சென்றிருந்தேன். ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தேன். ஸ்வாமிகளுக்கு என்னையும் ஆஞ்சநேயர் ஆலய நிர்மாண விஷயமும் நன்றாகவே தெரியும்.

ஆதலால், “ஷேமமா இரு. இப்பவே நெறய கூட்டம் வரதா இங்க வரவாள்ளாம் சொல்லிண்டிருக்கா. பெரிய ஆஞ்சநேயரான்னோ… அதான் அப்படி ஒரு ஆகர்ஷண சக்தி இருக்கு!” என்று ஆசீர்வதித்துவிட்டு, “பெரிய ஸ்வாமி ஆச்சே… அவர் சாப்பிடறதுக்கு தினமும் நெறய நிவேதனம் பண்ணணுமே?” என்று கவலையுடன் கேட்டார். உடனே நான், “தினமும் ஒரு மூட்டை அரிசி வடிச்சு நிவேதிக்கிறோம்” என்றேன்.

“சுத்த அன்னமாகவா?”

“இல்லே பெரியவா… சித்ரான்னங்களா (கலந்த சாத வகைகள்) தயார்செய்து, நிவேதனம் பண்றோம்.”“என்னென்ன பதார்த்தங்கள் பண்றேள்?”“காலையில் இருந்து வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, மிளஹோரை, தயிர்சாதம்னு மாத்திமாத்திப் பண்றோம் பெரியவா.”“அவ்வளவையும் வாங்கிக்க நெறய பக்த ஜனங்கள் வராளோ?”“அபரிமிதமான கூட்டம் வர்றது பெரியவா. அத்தனை பிரசாதமும் செலவாயிடறது” என்றேன் நான் பெருமையுடன்.பெரியவா சற்று மௌனமாக இருந்துவிட்டு, “பிரசாதங்களை எப் படிக் கொடுக்கறேள்? துளிப்போடறமா, இல்லை ெநறயவா?” என்று கேட்டார்.

நான் மிகப் பெருமையாக ஸ்வாமிகளிடம், “கையிலே வாழையிலையைக் கொடுத்து வாரிக் கொடுக்கறோம் பெரியவா” என்றேன்.உடனே ஸ்வாமிகள், அதை நானும் இங்க வர்றவா மூலம் கேள்விப்பட்டேன். அதிருக்கட்டும். உன்ன ஒண்ணு கேக்கறேன். ஸ்வாமி பிரசாதத்தைத் துளியூண்டு, பிரசாதமா கொடுக்கறது சரியா… இல்லே சாப்பாடு மாதிரி நெறைய கொடுக்கறது சரியா?” என்று கேட்டார் ஆர்வமுடன்.எனக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. குழம்பிப்போய் மௌனமாக நின்றிருந்தேன்.அந்த மாமுனிவர் சிரித்துக் கொண்டே, “என்ன, இப்பிடி ஸ்தம்பிச்சு நின்னுட்டியே! நானும் உன் மூலமா தெரிஞ்சுக்கலாம்னுதானே இதை கேக்கறேன்?” என்று மீண்டும் கேட்டார்.

நான் தயங்கியபடியே பவ்யமாக, “இல்லே பெரியவா… கோயிலுக்கு வர்ற பக்த ஜனங்கள் ரொம்ப தூரத்திலேருந்து கூட வந்துண்டிருக்கா… பசியா இருப்பா. அதனாலதான் பிரசாதத்தை நிறைய அள்ளிக் கொடுத்துண்டு…” என்று நான் முடிப்பதற்குள் ஸ்வாமிகள், “நீ நெனைக்கிறது எனக்குப் புரியறது. பிரசாதத்தைப் பிரசாதமா கொஞ்சமா கொடுத்துட்டு, பசிக்கிறவாளுக்கு ஒக்கார வெச்சு சாப்பாடு போடறதுதான் சரியாக இருக்குமோனு எனக்குத் தோண்றது” என்று நிறுத்தியவர், “நம்ம பண்டிதர்களும், வேத சாஸ்திரங்களும் ‘இப்படிப் பண்ணு, அப்படிப் பண்ணாதே’னு சொல்லி வெச்சிருந்தாலும் எத்தனையோ விஷயங்களை அனுபவ உண்மையா பார்த்தால்தான் தெரிஞ்சுக்க முடியறது” என்று பட்டும் படாமலும் சொல்லவே, எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை.

நான் மிகக் குழப்பத்துடன், “எனக்குப் புரியலையே பெரியவா. எது சரி? பிரசாதத்தைக் கொஞ்சமா அளவா கொடுப்பதா? நிறைய கொடுப்பதா? நீங்க உத்தரவு பண்ணணும்!” என்றேன் பணிவாக.

“அப்படி இல்லே… அப்படி இல்லே! எது சரிங்கறதை அனுபவ சித்தாந்தமா நீயே ஒருநாள் தெரிஞ்சுப்பே. அதுவரைக்கும் பொறுமையா இரு” என்று முடிவைச் சொல்லாமலே உத்தரவு கொடுத்துவிட்டார், அந்த மாமுனிவர்.

பாண்டிச்சேரி திண்டிவனம் மார்க்கத்தில் ‘பஞ்சவடி’ எனும் இடத்தில் 36 அடி உயர பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிக்கு ஆலயம் ஒன்றை நிர்மாணம் செய்திருக்கிறோம். கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இங்கும் பக்தர்களுக்குக் கையில் வாழையிலை கொடுத்து ‘போதும் போதும்’ என்கிற அளவுக்குப் பிரசாதங்கள் கொடுப்பது வழக்கம். சில நேரம் நானே கொடுப்பதும் வழக்கம்.

சமீபத்தில் ஒரு நாள் ஸ்வாமிக்கு நிவேதிக்கப்பட்ட பிரசாதங்களை நிறைய அள்ளிக் கொடுத்துக் கொண்டு இருந்தேன். ஓர் இலையில் கதம்பம் (சாம்பார் சாதம்), மற்றொன்றில் தயிர்சாதம் என விநியோகித்துக்கொண்டு இருந்தேன். அமர்ந்து பிரசாதங்களைச் சுவைத்துக் கொண்டு இருந்த நான்கைந்து பேர் என்னிடம் வந்தார்கள். அதில் ஒருவர் என்னிடம் சீரியஸாக, “சாம்பார், தயிர்சாதப் பிரசாதமெல்லாம் நெறயவே தர்றீங்க. வாய்க்கும் ரொம்பவே நல்லா இருக்கு. இருந்தாலும் ஒண்ணு சொல்றோம். சாம்பார் சாதத்துக்குத் தொட்டுக்க ஒரு பொரியலும், தயிர்சாதத்துக்குக் கொஞ்சம் ஒறப்பா ஊறுகாயும் வெச்சிங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்!” என்றார்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. உடனே என் நினைவுக்கு வந்தது, 93-ம் வருடம் காஞ்சி ஸ்ரீமடத்தின் தீர்க்கதரிசியான மகா ஸ்வாமிகள் சொன்ன நிதர்சன வாக்கியம். ‘அப்படி இல்லே… அப்படி இல்லே! எது சரிங்கிறதை அனுபவ சித்தாந்தமா நீயே ஒரு நாள் தெரிஞ்சுப்பே. அதுவரைக்கும் ெபாறுமையா இரு.’‘பிரசாதத்தைப் பிரசாதமாகக் கொஞ்சம்தான் கொடுக்க வேண்டும்’ என்பதை அனுபவ சித்தாந்தமாக இப்போது நான் தெரிந்துகொண்டுவிட்டேன்.

ரமணி அண்ணா