பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் சிறையில் அடைப்பு: கைதி எண் 15528
பெங்களூரு: ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா, வீட்டு வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். மேலும் சில பெண்களும், தங்களை பலாத்காரம் செய்து அதை பிரஜ்வல் வீடியோவாக எடுத்து வைத்ததாகப் புகார் அளித்த நிலையில், பிரஜ்வல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம், பாலியல் வழக்கில் பிரஜ்வலை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 14 மாதங்களாகவே பிரஜ்வல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதையடுத்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறை அதிகாரிகள் முன்னிலையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பின், 15528 என்ற கைதி எண், சிறை சீருடை ஆகியவை வழங்கப்பட்டு சிறையில் மற்ற தண்டனை கைதிகளுடன் மீண்டும் அடைக்கப்பட்டார்.


