லக்னோ: உபி, பஹ்ரைச் என்ற இடத்தை சேர்ந்தவர் மர்யம். இவருக்கும் அயோத்தியை சேர்ந்த அர்ஷாத் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு மர்யம் கணவன் வீடு உள்ள அயோத்திக்கு சென்றார். அங்கு உள்ள சாலைகள், மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகளை பார்த்து மர்யம் ஆச்சரியப்பட்டுள்ளார். இந்த திட்டங்களுக்கு மோடி, யோகி ஆதித்யநாத்தான் காரணம் என்று கூறி மர்யம் புகழ்ந்துள்ளார். இது அர்ஷாத்துக்கு பிடிக்கவில்லை.
இவ்வாறு பேசிய மனைவியை அடிப்பது, திட்டுவது என கொடுமைப்படுத்தியுள்ளார். இது பிடிக்காததால் மனைவியை பெற்றோர் வீட்டுக்கு அர்ஷாத் அனுப்பி விட்டார். இரு தரப்பையும் சேர்ந்த பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மர்யம் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார்.சமீபத்தில் பிரதமர் மோடியையும், யோகி ஆதித்யநாத்தையும் மர்யம் மீண்டும் புகழ்ந்துள்ளார். இதையடுத்து அர்ஷாத் தனது மனைவியிடம் 3 முறை தலாக் சொல்லியுள்ளார். இதுபற்றி போலீசில் மர்யம் புகார் அளித்தார். அர்ஷாத் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே, மர்யம் பேசும் வீடியோ கிளிப்புகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.