சென்னை: உலக கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் உலக கோப்பை செஸ் போட்டி நடந்து வருகிறது. கடந்த ஜூலை 30ல் தொடங்கிய இந்த தொடர் வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதொடரின் காலிறுதியில் சக இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியுடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினார்.
விறுவிறுப்பான 7 டைபிரேக் ஆட்டங்களுக்கு பிறகு பிரக்ஞானந்தா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இப்போட்டியில் வென்றதன் காரணமாக, விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார். அவரது இந்த சாதனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: விஸ்வநாதன் ஆனந்துக்கு பின்னர் உலகக்கோப்பை செஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய 2வது இந்தியர் என்ற உங்களின் வரலாற்று சாதனைக்கு வாழ்த்துகள் பிரக்ஞானந்தா. இந்திய செஸ் விளையாட்டின் முழுதிறனை இந்த போட்டி வெளிகாட்டியது. மேலும், அர்ஜுன் எரிகைசியும் சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.