சென்னை: கடல் ஆமைகளை பாதுகாக்க விசைப்படகுகளில் நவீன கருவி பொருத்தப்பட்டு படகின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக வனத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கடலோர காவல்படை, இந்திய கடற்படை மற்றும் கடல் ஆமை பாதுகாப்பில் உள்ள தன்னார்வ அமைப்பினர் கலந்துகொண்ட கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி: வேட்டையாட தடை செய்யப்பட்ட பட்டியலில் ஆமைகள் உள்ளன. முட்டையிடும் காலகட்டத்தில் அவை கடற்கரையில் இருந்து 5 கடல்மைல் (9 கி.மீ.) தூரத்திற்கு வருகின்றன. அந்த 9 கி.மீ. பகுதியில் நாட்டுப் படகில் சென்று மீன் பிடிப்பதினால் பிரச்சினைகள் எழுவதில்லை. ஆனால் விசைப் படகுகள் செல்லும்போது ஆமைகளுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கும் போது ஆமைகளும் சிக்கிவிடுகின்றன. இதை தடுப்பதற்காக வனத்துறை மற்றும் மீன்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
கடல் ஆமைகளை பாதுகாப்பதில் மீனவர்கள் ஒத்துழைக்க வேண்டும். அவை மீன்பிடி வலைகளில் சிக்கி இறந்துவிடக் கூடாது என்பதுதான் அரசின் நோக்கம். எனவே இதுகுறித்து மீனவர்களிடையே ஒரு கருத்தை உருவாக்குவதென்று அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பணியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள். இதற்கான விசைப்படகுகளில் ஒரு நவீன கருவி பொருத்தப்பட்டு, அதன் மூலம் படகின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். மீன்வளத்துறை இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.