மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாநகர் மாவட்ட 24வது மாநாடு தனியார் மகாலில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில், ‘சில ஆண்டுகளுக்கு முன் மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் விடுமுறை நாளில் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்தது. அப்போதே இனி் வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது எனத்தெரிவித்திருந்த ஒன்றிய அரசு, மீண்டும் பொங்கல் தினத்தில் சிஏ தேர்வுகளை அறிவித்துள்ளது.
இது தமிழக மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் விரோதமான அணுகுமுறையாகும். எங்களைப் பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை வேறு மாதிரி வைத்திருக்கிறோம். அமைச்சர் பதவி வாங்குவது மட்டும் அதிகார பகிர்வு கிடையாது, கொள்கை ரீதியான திட்டத்தை உருவாக்கி அந்தத் திட்டத்தின் அடிப்படையில் கூட்டணியில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரும்போது அந்த திட்டத்தை செயல்படுத்துகிற கூட்டணி அமைய வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு’ என்றார்.