பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கிய இடத்தில் வீடுகளுக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களையும், வீடுகள் மீது செல்லும் மின் கம்பிகளையும் மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே கதனநகரம் புது காலனியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 60 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் பயனாளிகள் வீடுகள் கட்டிக் கொண்டு வசித்து வருகின்றனர்.
வீடுகள் கட்டுவதற்கு முன்பு விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வழங்க இலவச வீட்டு மனைகள் வழங்கிய பகுதியில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இலவச வீட்டுமனைகளில் அந்தக் கம்பங்களோடு இணைத்து வீடுகள் கட்டிக்கொண்டு வசித்து வருகின்றனர். வீடுகள் மீது தாழ்வாக மின் கம்பிகள் செல்வதாலும், வீடுகளுக்குள், வாசல் அருகில் மின் கம்பங்கள் இருப்பதால் குடும்பத்தினர், கிராமமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
பல முறை மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் செய்தும் மின் கம்பங்கள் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மின் கம்பங்கள் மாற்றி அமைக்க பணம் செலுத்த வேண்டும் என்று கேட்பதாகவும், கூலி வேலை செய்து வரும் நாங்கள் மின் வாரியத்திற்கு பணம் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக மின் கம்பிகளுக்கு பயந்து வசித்து வருவதாகவும், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளுக்கு கட்டைகள் முட்டு போட்டு இருப்பதாக வேதனை தெரிவித்தனர். மழை காலம் தொடங்குவதால் கிராம மக்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வீடுகளுக்கு மேல் செல்லும் மின் கம்பிகள் மற்றும் வீடுகளுக்குள் உள்ள மின் கம்பங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.