Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

மின்சாரம் தடை பட்டதால் பாதிப்பு நீட் தேர்வை மீண்டும் நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மே 4ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையில் அன்றைய தினம் பெய்த கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்பதால் மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரி ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்கள் உள்ளிட்ட 16 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது என்று தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து நீட் மாணவர்கள் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. அப்போது, தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர்ந்த மாணவர்களில் பெரும்பாலானோர் மொத்தம் 180 கேள்விகளில் 100 கேள்விகளுக்கு விடை அளித்துள்ளனர். ஒரு மாணவன் 179 கேள்விகளுக்கு விடை அளித்துள்ளார். அதனால், மின்தடையால் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நிரூபிக்காத வரை, மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது. மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால், வழக்கை ஏற்க முடியாது எனக் கூறி மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.