பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் சமீபத்தில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு இளம் பெண்ணின் படத்தை பதிவிட்டு, படத்தில் காணப்படும் பெண்ணுடன் எனக்கு 12 வருடங்களாக தொடர்பு உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். அவரது பதிவு பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து தேஜ் பிரதாப்பை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி கடந்த 25ம் தேதி லாலு பிரசாத் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில், தேஜ் பிரதாப் யாதவ் எக்ஸ் தளத்தில் நேற்று உருக்கமான ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், என் அன்பான, அம்மா, அப்பா ஆகியோருக்கு, நீங்கள் தான் என்னுடைய உலகம். அப்பா, நீங்கள் இல்லையென்றால், இந்த கட்சி இருந்திருக்காது.என்னுடன் அரசியல் செய்யும் அதிகார பசி கொண்டவர்களும் இருக்க மாட்டார்கள். அம்மா அப்பா, நீங்கள் இருவரும் எப்போதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.