சென்னை : வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் தாயுமானவர் திட்டம் தமிழ்நாடு முழுவதும் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் ஏழை குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்பதற்காக தாயுமானவர் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.27,922 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆதரவற்றோர், தனித்து வசிக்கும் முதியவர்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள் உள்ள குடும்பங்கள் என சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் அடையாளம் காணப்பட்டு, இந்த திட்டத்தின் பயனாளிகளாக சேர்க்கப்பட உள்ளனர்.
அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடு போன்ற அனைத்து உதவிகளும் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு, மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராம சபை மூலம் பயனாளிகளை கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பு உறுதி செய்யப்படும். மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு அடுத்த மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றிய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 2.2% மக்களின் எண்ணிக்கை தாயுமானவர் திட்டத்தால் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.