சென்னை: பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு நாளை 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாளை திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிமிடெட், விழுப்புரம் சார்பாக வெள்ளிக்கிழமை அன்று கிளாம்பாக்கத்தில் (KCBT) இருந்து திருவண்ணாமலைக்கு 250 சிறப்பு பேருந்துகளும், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பண்ருட்டி, திருக்கோவிலூர், சிதம்பரம், விருதாச்சலம், திட்டக்குடி, வேலூர், ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 150 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை மற்றும் சனிக்கிழமை வார இறுதி நாட்களில் மக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக வெள்ளிக்கிழமை 335 மற்றும் சனிக்கிழமை 165, மொத்தம் 500 சிறப்புப் பேருந்துகளை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஓசூர், திருவண்ணாமலை (வழி ஆற்காடு, ஆரணி) மற்றும் திருவண்ணாமலை (வழி காஞ்சிபுரம், வந்தவாசி) ஆகிய ஊர்களுக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக வெள்ளிக்கிழமை 20, சனிக்கிழமை 20, மொத்தம் 40 சிறப்பு பேருந்துகளை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே, பயணிகள் https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இச்சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.