செங்கல்பட்டு: பொத்தேரி அருகே அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியிடம் தகராறில் ஈடுபட்ட 6 தனியார் கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் 6 இளைஞர்கள் அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவு வாயிலுக்கு வந்தனர். அங்கிருந்த காவலாளியிடம் உள்ளே நடைபெறும் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறி உள்ளே செல்ல வேண்டும், என்றனர்.
அப்போது, காவலாளி வருகை பதிவேட்டில் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்துவிட்டு உள்ளே செல்லுமாறி கூறினார். அப்போது, இளைஞர்கள் சிலர் காவலாளியை அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டதோடு நுழைவு வாயில் கதவை சேதப்படுத்தினர்.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 6 இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில், தகராறில் ஈடுபட்டவர்கள் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேஷ்குமார்(18), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேகநாதன்(18), சென்னை அசோக்நகர் பகுதியைச் சேர்ந்த ரித்திஷ்(18), திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக்(18) மற்றும் ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த துரைராஜ்(19) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.