சென்னை: பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்படுத்திய 19 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் பிரபல தனியார் கல்லூரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமில்லாமல் பல வெளி மாநிலத்தில் இருந்தும் வந்து மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் தனியார் கல்வி நிறுவன விடுதிகளில் மட்டுமில்லாமல், அருகில் இருக்கும் பிற தனியார் விடுதிகள் மற்றும் தனியாக வீடு எடுத்தும் தங்கியுள்ளனர். பான் மசாலா, குட்கா, கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருள் புழக்கம் மாணவர்களிடையே அதிகளவில் இருப்பதாக போலீசாருக்கு தொடந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
நேற்று காலை திடீரென கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் தலைமையில், கூடுதல் ஆணையர் மகேஸ்வரி முன்னிலையில், தாம்பரம் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி மற்றும் போலீசார் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகள், வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, பீர்க்கன்காரணை, மண்ணிவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட காவல் நிலையகளில் இருந்து ஏராளமான போலீசார் வந்தனர்.
தங்கும் விடுதியில் உள்ள மாணவர்களின் பை, இருசக்கர வாகனங்கள், கார்கள் என அனைத்திலும் சோதனை நடத்தினர். பொத்தேரியில் உள்ள தங்கும் விடுதிகள் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்தன. சோதனையில் அரை கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட், 20 கஞ்சா ஆயில், 5 கஞ்சா பாக்கு, போதை பானை 1, 7 ஹூக்கா இயந்திரங்கள், 6 கிலோ ஹூக்கா பவுடர் உள்ளிட்ட போதைப்பொருட்களும், 60 பைக்குகள் மற்றும் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து தனியார் கல்லூரியைச் சேர்ந்த 19 மாணவர்கள், மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான செல்வமணி (29) மற்றும் ஒருவர் என 21 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். மாணவர்களுக்கு போதைப்பொருட்களை வழங்குபவர்கள் யார் என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் உள்பட 20 பேர் மீது மறைமலைநகர் காவல்நிலையத்திலும், ரவுடி செல்வமணி மீது கூடுவாஞ்சேரி காவல்நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 21 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. நேற்று காலை 6 மணி முதல் நடத்தப்பட்ட இந்த சோதனை சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு முடிவுக்கு வந்தது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை மறைமலைநகர் காவல் நிலையத்தில் போலீசார் வைத்துள்ளனர். மறைமலைநகர் போலீசார் மாணவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பிரபல கல்லூரியில் போலீசார் குவிக்கக்கப்பட்டு நடந்த அதிரடி சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் வைத்திருந்த 19 மாணவர்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.